வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி: பாதியில் கரைந்த அ.தி.மு.க.வினரின் உற்சாகம்


வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி: பாதியில் கரைந்த அ.தி.மு.க.வினரின் உற்சாகம்
x
தினத்தந்தி 10 Aug 2019 4:30 AM IST (Updated: 10 Aug 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதால், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உற்சாகம் பாதியிலேயே கரைந்துபோனது.

சென்னை,

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் எண்ணப்பட்ட சில சுற்றுகளின் அடிப்படையில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை பின்னுக்கு தள்ளி, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வந்தார். ஆரம்ப சுற்றுகளில் ஏ.சி.சண்முகம் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வந்தார்.

இதையடுத்து ஏ.சி.சண்முகம் பிரமாண்ட வெற்றி பெற்றுவிடுவார் என்ற எதிர்பார்ப்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு அக்கட்சியின் தொண்டர்கள் படையெடுத்தனர். அங்கு திரண்ட கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். மேலும், அங்கிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு தொண்டர்கள் ஆரத்தி எடுத்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.

நடையை கட்டினர்

சிறிது நேரத்தில் ஓட்டு எண்ணிக்கையில் ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளி கதிர் ஆனந்த் அதிக வாக்குகள் பெற்று தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வந்தார். அதன் பிறகு அவர் பின்னடைவை சந்திக்கவே இல்லை. இதனால் அதிருப்தியடைந்த அ.தி.மு.க. தொண்டர்கள் தலைமை அலுவலகத்தில் இருந்து நடையை கட்டினார்கள். தொண்டர்கள் அனைவரும் புறப்பட்டு சென்றதால், அ.தி.மு.க. தலைமை அலுவலகம் பாலைவனம் போல வெறிச்சோடி காணப்பட்டது.

அ.தி.மு.க.வினர் இடையே மகிழ்ச்சியில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை உற்சாகம், பாதியிலேயே காற்றில் கரைந்துவிட்டது.

தி.மு.க. கொண்டாட்டம்

இதேபோல், நேற்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வந்ததால், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வெறிச்சோடி காணப்பட்டது. அதன்பிறகு, தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை வகிக்க தொடங்கினார். இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயத்துக்கு தி.மு.க. தொண்டர்கள் வரத்தொடங்கினர்.

கதிர் ஆனந்த் அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்ததால், பிற்பகல் 2 மணியளவில் அறிவாலயத்தில் திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் மிகவும் உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தேர்தல் வெற்றியை கொண்டாடினர். இதில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தி.மு.க. வர்த்தகரணி துணை செயலாளர் வி.பி.மணி, அ.தி.மு.க.வில் இருந்து அண்மையில் தி.மு.க.வில் இணைந்த கலைராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story