2 நாள் ஆய்வு கூட்டம் நிறைவு: மழைநீர் சேமிப்பு பணியில் தீவிரம் காட்ட வேண்டும் கலெக்டர்களுக்கு, முதல்-அமைச்சர் அறிவுரை


2 நாள் ஆய்வு கூட்டம் நிறைவு: மழைநீர் சேமிப்பு பணியில் தீவிரம் காட்ட வேண்டும் கலெக்டர்களுக்கு, முதல்-அமைச்சர் அறிவுரை
x
தினத்தந்தி 10 Aug 2019 5:15 AM IST (Updated: 10 Aug 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

மழைநீர் சேமிப்பு பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கி உள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள், குடிமராமத்து மற்றும் மழைநீர் சேமிப்பு பணிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலெக்டர்கள் 2 நாள் ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

முதல் நாள் ஆய்வு கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 16 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

13 கலெக்டர்கள் பங்கேற்பு

தலைமைச் செயலகத்தில் 2-ம் நாள் ஆய்வு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசுத்துறை முதன்மைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

ஆர்.சீத்தாலட்சுமி (சென்னை), பி.பொன்னையா (காஞ்சீபுரம்), மகேஸ்வரி ரவிக்குமார் (திருவள்ளூர்), கே.எஸ்.கந்தசாமி (திருவண்ணாமலை), வி.அன்புச்செல்வன் (கடலூர்), டாக்டர் எஸ்.சுப்பிரமணியன் (விழுப்புரம்), டாக்டர் எஸ்.பிரபாகர்(கிருஷ்ணகிரி), எஸ்.மலர்விழி (தர்மபுரி), எஸ்.ஏ.ராமன் (சேலம்), எம்.ஆசியா மரியம் (நாமக்கல்), சி.கதிரவன் (ஈரோடு), டாக்டர் கே.எஸ்.பழனிசாமி (திருப்பூர்), எம்.விஜயலட்சுமி (திண்டுக்கல்) ஆகிய 13 மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொண்டனர். பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாசும் பங்கேற்றார்.

வேலூர் வாக்கு எண்ணிக்கை காரணமாக அந்த மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மழை, மீட்பு பணிகள் காரணமாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

முதல்-அமைச்சர் அறிவுரை

கூட்டத்தில் கலெக்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தற்போது தமிழ்நாடு கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளதால், எதிர்வரும் காலங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படாத வகையில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர்வாருதல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ஒரு சொட்டு தண்ணீரையும் வீணாக்காமல் சேமிக்க வேண்டும். எனவே மழைநீர் சேமிப்பு திட்டம் 100 சதவீதம் வெற்றியடைய வேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

அரசின் திட்டங்கள் மக்களை எந்தவித தங்கு தடையின்றி சென்றடைய வேண்டும். கலெக்டர்கள் அலுவலகங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வுகாண வேண்டும். பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது போன்ற பல்வேறு அறிவுரைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலெக்டர்களுக்கு வழங்கினார்.

கள ஆய்வு

2 நாள் கூட்டத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘அரசின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்து மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும். எனது தலைமையில் கலெக்டர்கள் ஆய்வு கூட்டம் 4 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும்’ என்றார்.

ஆய்வு கூட்டத்தில் பங்கேற்காத வேலூர், நீலகிரி, கோவை ஆகிய 3 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தனியாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story