வெள்ளை - நீல நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர் தரிசனத்திற்கு காத்திருக்கும் 2 லட்சம் பக்தர்கள்


வெள்ளை - நீல நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர் தரிசனத்திற்கு காத்திருக்கும் 2 லட்சம் பக்தர்கள்
x
தினத்தந்தி 10 Aug 2019 10:58 AM IST (Updated: 10 Aug 2019 10:58 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறை நாளும் பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமையுமான இன்று அத்திவரதர் தரிசனத்துக்காக காலையிலேயே 2 லட்சம் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

சென்னை

41-வது நாளான இன்று அத்திவரதருக்கு வெள்ளை மற்றும் நீல நிறப்பட்டால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தரிசனத்துக்காக நேற்று இரவில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அதிகாலை 4.30 மணி அளவில் கிழக்கு ராஜகோபுரம் நடை திறக்கப்பட்டு 5 மணி அளவில் தரிசனம் தொடங்கியது. காலையிலேயே சுமார் 2 லட்சம் பக்தர்கள் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருக்கின்றனர்.

கடந்த ஐந்து நாட்களாக சராசரியாக 4 லட்சம் பேர் தொடர்ச்சியாக தரிசனம் மேற்கொண்டுவருகின்றனர். 40 நாட்களில் சுமார் 70 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதர் தரிசனம் நிறைவடைய இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகள், அன்னதானம் உள்ளிட்ட ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.

அத்திவரதர் வைபவத்திற்காக 2,500 போலீசார் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, அமைச்சர் காமராஜ் குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

கோவில் வளாகத்திற்குள் நுழைய போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி அத்திவரதர் கோவில் சுகாதார பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.


Next Story