வெங்கையா நாயுடு புத்தகத்தை இன்று வெளியிடுகிறார் அமித்ஷா சென்னை வருகை பலத்த போலீஸ் பாதுகாப்பு
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ஆவணப் புத்தகம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது.
சென்னை,
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ஆவணப் புத்தகம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த புத்தகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிடுகிறார். இந்த விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு விமானம் மூலம் அமித்ஷா சென்னை வந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகளும் வரவேற்றனர். அமித்ஷா, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று இரவு தங்கினார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையை அமித்ஷா எடுத்துள்ளதால், அவருக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே அமித்ஷா வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story