விரைவில் உள்ளாட்சி தேர்தல் எடப்பாடி பழனிசாமி தகவல்


விரைவில் உள்ளாட்சி தேர்தல் எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2019 5:30 AM IST (Updated: 11 Aug 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வண்டலூர், 

காஞ்சீபுரம் மாவட்டம், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3 சிங்கக்குட்டிகள் மற்றும் 4 புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டிய பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அருளாசியோடு, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்த 3 சிங்கக் குட்டிகளுக்கும், 4 புலிக்குட்டிகளுக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு ஐதராபாத் நேரு உயிரியல் பூங்காவிலிருந்து காண்டாமிருகம் வரவழைக்கப்பட்டு, ‘ராம்’ என்று பெயர் சூட்டப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலூரில் மிகப்பெரிய வெற்றி

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: காண்டாமிருகத்தைத் தொடர்ந்து வேறு ஏதாவது புதிய மிருகங்கள் கொண்டு வரப்படுமா?

பதில்: பீகார், பாட்னாவிலிருந்து பெண் காண்டாமிருகம் கொண்டு வருவதற்கு நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். அது விரைவாக வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும்.

கேள்வி: வேலூர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: முன்னர் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம். அதேபோல, தள்ளி வைக்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தலிலும் பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொல்லியிருந்தார். ஆனால் 8 ஆயிரத்து 141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். இருந்தாலும், 6 சட்டமன்றத் தொகுதிகளில், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றோம். இதை மிகப் பெரிய வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.

மதம், ஜாதி அரசியல் கிடையாது

கேள்வி: முத்தலாக் மசோதா, காஷ்மீர் பிரச்சினை இரண்டிற்கும் பா.ஜ.க. அரசிற்கு ஆதரவு தெரிவித்ததால் சிறுபான்மையினர் ஓட்டு அ.தி.மு.க. விற்கு விழவில்லை என்பது பரவலாக அரசியல் நோக்கர் கள் கூறுகின்றார்களே?

பதில்: ஓட்டு யாருக்கு அளிக்கப்படுகின்றது என்பது ரகசியம். அப்படியிருக்கும் போது சிறுபான்மையின மக்கள் ஓட்டுபோட்டார்களா? பெரும்பான்மையின மக்கள் ஓட்டு போட்டார்களா? என்று எப்படித் தெரியும். யூகத்தின் அடிப்படையில் கேட்கின்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. ஜாதி, மதம், இனம், மொழி இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட மாநிலம் தமிழ்நாடு. இன்றைக்கு தமிழகம் தான் அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, மதம், ஜாதியின் அடிப்படையில் இங்கு அரசியல் செய்வது கிடையாது, அனைத்துத் தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு நாங்கள் பார்க்கிறோம்.

கேள்வி: இதே நிலை தான் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடருமா?

பதில்: உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

விரைவில் தேர்தல் வரும்

கேள்வி: எப்போது தேர்தல் வரும்?

பதில்: விரைவில் தேர்தல் வரும்.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. பந்தலூர் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, அதை சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல, காட்டுக்குப்பை என்ற இடத்தில் 34 பேர் வெள்ளத்தில் சிக்கி, பேரிடர் மீட்புக் குழுவின் மூலமாக மீட்டெடுத்து இருக்கிறோம். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிற காரணத்தால், அங்கே பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் மீட்புக் குழுவின் மூலமாக மீட்டு, கிட்டத்தட்ட 5 ஆயிரத்து 500 நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அவர்களின் உறவினர்கள் வீட்டில் தங்கியிருக்கிறார்கள். நீலகிரி மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் நேரடியாக அனைத்து இடங்களிலும் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து, வருவாய்த்துறை மற்றும் பிற துறை அதிகாரிகளும் அங்கே கண்காணித்து பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றார்.

ஆந்திர முதல்-மந்திரிக்கு நன்றி

கேள்வி: சென்னையில் 2 நாட்கள் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

பதில்: பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் பிரச்சினை போன்ற அடிப்படை வசதிகள் முழுவதையும் மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் கலெக்டர்கள் கண்காணித்து மக்களுக்குத் தேவையான நன்மைகளை செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி: சென்னைக்கு கிருஷ்ணா நீரைக் கொண்டு வர தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

பதில்: ஆந்திர முதல்-மந்திரியை கடிதப் போக்குவரத்து மூலமாக தொடர்பு கொண்டு அவரை மூத்த அமைச்சர்கள் சந்திக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். அவரும் அதற்கு சம்மதித்து மூத்த அமைச்சர்களை அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) ஆந்திரா சென்று, விஜயவாடாவில் ஆந்திர முதல்-மந்திரியை, சந்தித்து, தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவரும் மனமுவந்து நம்முடைய கோரிக்கையை ஏற்று, சுமார் 8 டி.எம்.சி. தண்ணீரை சென்னை மாநகர மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். அந்தத் தண்ணீர் விரைவாக வரும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு தண்ணீர் வரும்போது, சென்னை மாநகர மக்களுக்கு தங்குதடையில்லாமல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். மனமுவந்து நாங்கள் கேட்ட கோரிக்கையை நிறைவேற்றிய ஆந்திர முதல்-மந்திரிக்கு, தமிழ் நாட்டு மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story