புதுமாப்பிள்ளை தற்கொலை வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததை கண்டித்ததால் விபரீத முடிவு
வேறுபெண்களுடன் தொடர்பு இருந்ததை கண்டித்ததால் மனைவி முன்முன்னே மேம்பாலத்தில் இருந்து குதித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்,
வேலூரை அடுத்த கணியம்பாடி என்.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 32). இவர், அசாம் மாநிலத்தில் ராணுவவீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகள் புவனேஸ்வரிக்கும் (25) கடந்த மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது. புவனேஸ்வரி கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். கணவனும் மனைவியும் நேற்று காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சத்துவாச்சாரி நோக்கி சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மகேஷ்குமார் மோட்டார் சைக்கிளை வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் சாலையோரம் நிறுத்தினார். தொடர்ந்து கணவன்-மனைவி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி சத்தமாக பேசிக்கொண்டனர். இந்த நிலையில் திடீரென மகேஷ்குமார் மேம்பால சுவரின் மீது ஏறி நின்று கீழே குதித்தார். அவர் கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள அணுகுசாலையில் தலைகீழாக வந்து விழுந்தார். இதில், மகேஷ்குமாரின் தலை பிளந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
கணவர் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து மேம்பாலத்தில் நின்றபடி புவனேஸ்வரி கதறி அழுதார். மேம்பாலம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் விரைந்து சென்று மகேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புவனேஸ்வரி ஆட்டோவில் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் செல்லும் வழியில் மயக்கமானார். இதையடுத்து புவனேஸ்வரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வேறு பெண்களுடன் தொடர்பு...
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். மகேஷ்குமார் ராணுவத்தில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சிறுவயதிலேயே தாயை இழந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தந்தை சுந்தரேசன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து மகேஷ்குமாருக்கும், உறவினர் பெண் புவனேஸ்வரிக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் தான் மகேஷ்குமாருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது புவனேஸ்வரிக்கு தெரிய வந்துள்ளது. அதனால் கணவனை அவர் கண்டித்தார். இதையொட்டி அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
குடும்ப பிரச்சினையால் விரக்தியடைந்த மகேஷ்குமார் ‘இருவரும் உயிரோடு இருக்க வேண்டாம். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்று கூறி நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு புவனேஸ்வரியை அழைத்து சென்றார். ஆனால் அங்கு செல்ல புவனேஸ்வரி மறுத்து கணவரை சமாதானப்படுத்தி சத்துவாச்சாரி நோக்கி அழைத்து வந்தார்.
புவனேஸ்வரி மறுப்பு
வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே வந்த போது மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மகேஷ்குமார் கூறி உள்ளார். அதனை புவனேஸ்வரி ஏற்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார் என விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
Related Tags :
Next Story