காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசன நெரிசலில் சிக்கி 15 பேர் மயக்கம்


காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசன நெரிசலில் சிக்கி 15 பேர் மயக்கம்
x
தினத்தந்தி 11 Aug 2019 3:45 AM IST (Updated: 11 Aug 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் தரிசன நெரிசலில் சிக்கி 15 பேர் மயக்கம் அடைந்தனர்.

காஞ்சீபுரம், 

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சி தந்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

41-வது நாளான நேற்று அத்திவரதர் வெள்ளை, ஊதா நிற பட்டாடையில் அத்தி மாலை, ஏலக்காய் மாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தந்தார்.

9 மணி நேரம் காத்திருப்பு

வருகிற 16-ந் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சீபுரத்துக்கு வருகை தருகின்றனர். நேற்று பெருமாளுக்கு உகந்த சனிக் கிழமை என்பதால் பக்தர்கள் 9 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரம் வருகின்றனர். வெளியூரில் இருந்து வருகை தரும் பக்தர்கள் வாகனங்களில் இருந்து இறக்கிவிடப்பட்டு 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து வந்து அத்திவரதரை தரிசிக்கின்றனர்.

நேற்றும் பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சீபுரம் நகரம் திக்குமுக்காடியது. விடுதிகள் நிரம்பி காணப்பட்டது. ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

15 பேர் மயக்கம்

நேற்று முன்தினம் அத்திவரதரை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள் நள்ளிரவு 12 மணி வரை அனுமதிக்கப்பட்டனர். நேற்று அத்திவரதர் தரிசன நெரிசலில் சிக்கி 15 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள நடமாடும் மருத்துவ குழுவினர் விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர்.

நேற்று அத்திவரதரை அமைச்சர் காமராஜ் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வி.சோமசுந்தரம், என்.ஆர்.சிவபதி, காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித் குமார் உள்பட பலர் அத்திவரதரை தரிசித்தனர்.

திடீர் மழை

காஞ்சீபுரத்தில் நேற்று மாலை 5½ மணி அளவில் திடீரென 20 நிமிடம் பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசித்தனர்.

பலத்த மழையால் காஞ்சீபுரம் நகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று ஒரே நாளில் இரவு 7½ மணி வரை 2 லட்சத்து 65 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். மேலும் 1½ லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க காத்திருந்தனர். அவர்கள் நள்ளிரவு 2 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் உயர் அதிகாரி தெரிவித்தார்.

Next Story