முன்னாள் எம்.பி. மகன் கைது
ரெயில் பயண சலுகை அட்டையில் மோசடி செய்ததாக முன்னாள் எம்.பி.யின் மகன் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்தவர் செல்வராஜ். இவர் 1980 முதல் 1984 வரை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த மார்ச் மாதம் இறந்து விட்டார்.
இவரது மகன் கலைராஜ் (வயது 48), கட்டிட காண்டிராக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு பெங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலில், முதல் வகுப்பு ‘ஏ.சி.’ பெட்டியில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
தந்தையின் பயண அட்டை
இந்த ரெயில் நேற்று அதிகாலையில் பெரம்பூர் ரெயில் நிலையம் வந்த போது, ரெயில்வே ஊழல்தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த ரெயிலில் ஏறி பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது கலைராஜின் டிக்கெட்டை அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவர், ரெயில்வே சலுகை அட்டையில் (பாஸ்) பயணம் செய்வதாக கூறினார்.
இதையடுத்து அவர் பயன்படுத்திய சலுகை அட்டையை அதிகாரிகள் வாங்கி சோதனை செய்த போது, அது அவரது தந்தையும் முன்னாள் எம்.பி.யுமான செல்வராஜூக்கு வழங்கப்பட்ட ரெயில்வே சலுகை அட்டை என்பது தெரியவந்தது.
கைது செய்து விசாரணை
இதையடுத்து சலுகை அட்டையை மோசடியாக பயன்படுத்தி பயணம் செய்ததாக கலைராஜ் மீது ஊழல்தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கலைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story