பேராசிரியர்கள், மாணவிகளை தங்கள் வீட்டுக்கு அழைக்கக்கூடாது சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை
பேராசிரியர்கள், மாணவிகளை தங்கள் வீட்டுக்கு அழைக்கக்கூடாது சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை
சென்னை,
கல்லூரி பாடம் தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்காக கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவிகளை சில விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் வீடுகளுக்கு அழைத்து பாடம் நடத்துவதை வழக்கத்தில் கொண்டுள்ளனர். இதில் சில மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவதாக புகார்கள் எழுந்து உள்ளது.
பல்கலைக்கழகம் அதிரடி
இந்தநிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல்கலைக்கழக வளாகத்தை பாலியல் துன்புறுத்தல் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு துணைவேந்தர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல்கலைக்கழக வளாகம் அறிவு சார்ந்த இடமே தவிர, பாலியல் துன்புறுத்தலுக்கான இடம் இல்லை. அதுபோன்ற செயல்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும்.
கிண்டி வளாகத்தில் உள்ள கோட்பாடு இயற்பியல்துறை தலைவரும், பேராசிரியையுமான ரீட்டா ஜான் தலைமையிலான புகார் குழுவிடமோ, பதிவாளரிடமோ அல்லது துணைவேந்தரிடமோ பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம். மாணவிகள், பேராசிரியைகள் இந்த புகார் குழுவையோ, பதிவாளர் அல்லது துணை வேந்தரையோ புகாரை நிவர்த்தி செய்வதற்காக அணுகலாம்.
வீடுகளுக்கு அழைக்கக்கூடாது
மாணவர்கள், பேராசிரியர்கள் என யாராவது மாணவிகளையோ மற்ற பெண்களையோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் துணைவேந்தர் அறைக்குச் சென்று புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், பேராசிரியைகள், விரிவுரையாளர்கள் மாணவ-மாணவிகளை தங்கள் வீடுகளுக்கு அழைக்கக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கீனம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெறாமல் மாணவ-மாணவிகள் பேராசிரியர்களின் வீடுகளில் தங்கவோ, பேராசிரியர்கள் தலைமையில் தனிப்பட்ட கல்விச்சுற்றுலாவுக்கு செல்லவோ கூடாது.
நடவடிக்கை
இந்த நோட்டீஸ் மூலம் மாணவ-மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும் துணைவேந்தர் தெரிவிப்பது என்னவென்றால் பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story