தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்கும் ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் காலஅவகாசம் தமிழக அரசு உத்தரவு


தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து விசாரிக்கும் ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் காலஅவகாசம் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 1 Sept 2019 3:00 AM IST (Updated: 1 Sept 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் ஆணையத்துக்கு மேலும் 6 மாத காலம் அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் கடந்த ஆண்டு (2018) கிளர்ந்து எழுந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி போராட்டம் தீவிரமான நிலையில், போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரு நபர் விசாரணை ஆணையம்

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

14-வது கட்ட விசாரணையை அவர் கடந்த 27-ந்தேதி நடத்தினார். தொடர்ந்து நேற்று முன்தினமும் விசாரணை நடந்தது. இந்தநிலையில் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் கால அவகாசம் கடந்த 22-ந் தேதியுடன் முடிவடைந்து இருந்தது.

6 மாதம் கால அவகாசம்

விசாரணை இன்னும் முடிவடையாததால், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் காலம் அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 22-ந்தேதி வரை இந்த ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணையை தொடரும். ஏற்கனவே 2 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 3-வது முறையாக கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story