கடன் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண அனைவரது ஒத்துழைப்பும் வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பேச்சு
கடன் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண சட்டங்கள் இருந்தாலும் அனைவரது ஒத்துழைப்பும் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசினார்.
சென்னை,
சென்னை ‘லா 85’ அறக்கட்டளை, இந்திய தவணை முறை கடனுதவி சங்கங்களின் கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.பி.ஏ.,) சார்பில் கடன் வசூல் மற்றும் கடனுக்கு தீர்வு காண்பதில் கடன் வசூல் தீர்ப்பாயங்கள், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது.
கருத்தரங்கை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தொடங்கிவைத்தார்.
இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கலந்துகொண்டு பேசியதாவது:-
ஒத்துழைப்பு
நல்ல நிலையில் இயங்கிய நிறுவனங்கள் திடீரென சரிவை சந்தித்தால் அந்த நிறுவனங்களை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு வருவதற்காகவே திவால் சட்டங்கள் உள்ளன. இதுபோன்ற சட்டங்கள் நொடிந்துள்ள பல நிறுவனங்களுக்கு நல்ல விடிவுகாலத்தை தந்துள்ளன.
ஆனால் புதிதாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள், கடன் வசூல் தீர்ப்பாயங்கள் போன்ற அமைப்புகள் இல்லை என்றால் கட்டப்பஞ்சாயத்து பெருகி விடும். கடன் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இதற்கு சட்டங்கள் இருந்தாலும், அதற்கு அரசு எந்திரங்கள், மக்கள் பிரதிநிதிகள், மத்தியஸ்தர்கள், வழக்காடிகள் என அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நீதிபதிகள்
இந்த கருத்தரங்கில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், டி.ராஜா, புஷ்பா சத்யநாராயணா, எஸ்.வைத்தியநாதன், வி.பாரதிதாசன், வி.பார்த்திபன், அப்துல் குத்தூஸ், பி.டி.ஆதிகேசவலு, பி.டி.ஆஷா, செந்தில்குமார் ராமமூர்த்தி மற்றும் சென்னை கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவர் நீதிபதி தருண்குமார் கவுசல், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், மூத்த வக்கீல்கள் இ.ஓம்பிரகாஷ், என்.எல்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை வக்கீல்கள் நவீன் மூர்த்தி, சுபத்ரா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
Related Tags :
Next Story