சென்னை அருகே கடற்கரையை தூய்மைப்படுத்தி வரும் பெல்ஜியம் பெண் 8 ஆண்டு பணிக்கு மக்கள் வரவேற்பு
சென்னை அருகே உள்ள கடற்கரை பகுதிகளை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் 8 ஆண்டுகளாக தூய்மைப் படுத்தி வரும் சம்பவம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை,
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் பிலிப். இவர் 8 ஆண்டுகளுக்கு முன்னால் கப்பல் பணிக்காக சென்னை வந்தார். அவரது மனைவி விர்ஜினி விலாமிங். இவர் புகைப்பட கலைஞராக உள்ளார். இவர்கள் சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் வசிக்கின்றனர்.
கணவன்-மனைவி இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் ஈஞ்சம்பாக்கம் அருகில் உள்ள அக்கரை கடற்கரைக்கு வந்தனர். அங்கு கிடந்த அசுத்தத்தையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் பார்த்து விர்ஜினி விலாமிங் மனம் வெதும்பினார். அத்துடன் நில்லாமல் அந்த பகுதியை சுத்தப்படுத்தும் பணியில் அவரே இறங்கினார்.
அதைப் பார்த்த உள்ளூர் மக்கள் சிலர் அவருக்கு உதவி செய்யத் தொடங்கினர். அப்படி படிப்படியாக அவர், ‘நம்ம கடற்கரை, நம்ம சென்னை’ என்ற இயக்கத்தையே வளர்த்தெடுத்தார். தற்போது இந்த இயக்கத்தில் 30 தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக கடற்கரையை சுத்தம் செய்து வருகின்றனர். இந்த பணிகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
தூய்மைப்பணி
அந்தவகையில் நேற்றும் வழக்கம் போல அக்கரை கடற்கரையை சுத்தப்படுத்த விர்ஜினி விலாமிங் வந்திருந்தார். அவருடன் அந்தப் பகுதியில் வசிக்கும் வெளிநாட்டினர், தன்னார்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலரும் வந்திருந்தனர். அவர்கள் கடற்கரையில் சிதறிக் கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.
மீன்வலை கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், சாப்பாடு பொட்டலத்தில் பயன்படுத்தப்படும் தாள்கள் என அதிக அளவில் குப்பை சேகரிக்கப்பட்டு இருந்தது. இறுதியில் 35-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் குப்பை சேகரிக்கப்பட்டது. மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் வெளிநாட்டவர்களுடன் இணைந்து அங்கிருந்த சுவர்களில், பிளாஸ் டிக் உபயோகத்துக்கு எதிரான படங்களை வரைந்தனர்.
இந்த சமூகசேவை குறித்து விர்ஜினி விலாமிங் கூறியதாவது:-
சுகாதார விழிப்புணர்வு
8 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தபோது இந்தப் பகுதியை மீனவர்களே அசுத்தமாக வைத்திருந்தனர். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. அவர்களின் மனநிலையிலும் மாற்றங்கள் வந்துள்ளன. இடத்தை சுத்தப்படுத்தும் பணியோடு நான் நின்றுவிடவில்லை. அருகில் உள்ள பள்ளிக்கூடங்களை அணுகினேன். அவர்களுக்கும் சுத்தம், சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
ஆங்கில உரையாடல், கழிவறைகளை சுத்தமாக வைத்திருத்தல், அடிக்கடி கையை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார அம்சங்களையும் பள்ளிக்கூடங்களுக்கு தினமும் சென்று சொல்லிக் கொடுக்கிறேன். அவர்கள் வீடுகளுக்கும் சென்று தேவையான உதவிகளைச் செய்கிறேன். புகைப்படம் மூலம் கிடைக்கும் வருமானம், சில நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் உதவிகளை வைத்து இந்தப் பணியைச் செய்து வருகிறேன்.
பள்ளி மாணவ-மாணவிகள்
எனது மகள் ஷரன் பெல்ஜியத்தில் படிக்கிறார். விடுமுறைக்கு இங்கு வந்து சுத்தப்படுத்தும் பணியில் என்னுடன் ஈடுபடுவார். பிரார்த்தனா தியேட்டர் முதல் உத்தண்டி வரை சுமார் 17 கி.மீ. நீள கடற்கரையை நாங்கள் சுத்தப்படுத்தி வருகிறோம். மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களும் இந்தப் பணியில் எங்களுக்கு உதவுகிறார்கள்.
ஈஞ்சம்பாக்கம் மற்றும் நீலாங்கரையில் உள்ள அட்வெந்து கிறிஸ்டியன் தொடக்கப் பள்ளி மற்றும் பனையூர் பஞ்சாயத்துப் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளும் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைக்கு வரும் பொதுமக்களிடம் மாணவர்கள் சென்று குப்பை கொட்டுவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிளாஸ்டிக் திமிங்கலம்
இந்த இயக்கத்துடன் இணைந்து ஓவியர் கவுதமும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவர் 60 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளைக் கொண்டு 25 அடி நீள திமிங்கலத்தின் உருவத்தை அமைத்திருந்தார். திமிங்கலத்தையும் பிளாஸ்டிக் கொன்றுவிடும் என்ற கருத்தை அந்த உருவம் வெளிப்படுத்தியது.
அந்த திமிங்கலத்தின் அருகே மாணவர்கள் நின்றுகொண்டு சுற்றுப்புற சூழலுக்கு தேவையான சுத்தத்தை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியிருந்தனர். சுற்றுப்புறசூழலை கெடுக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தமாட்டோம் என்று அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாமல்லபுரத்தில் உள்ள நன்றி அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் செய்திருந்தன.
Related Tags :
Next Story