தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை உயர்வு அமலுக்கு வருவது எப்போது? அதிகாரி பதில்
தமிழகத்தில், போக்கு வரத்து விதி மீறலுக்காக கூடுதல் அபராதம் விதிக்கும் திட்டம் இந்த வாரத்தில் அமலுக்கு வரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை,
நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை பல மடங்காக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்ட திருத்த மசோதாவின்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போதைய அபராத தொகை ரூ.500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போது ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இனி அந்த அபராத தொகை ரூ.10 ஆயிரமாக வசூலிக்கப்படும். இதுபோல ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 அபராதமானாது, இனி ரூ.1,000 ஆக உயருகிறது.
நாடு முழுவதும் அமல்
இதுபோல் ஒவ்வொரு போக்குவரத்து விதிமீறலுக்கும் அபராத தொகை பலமடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த அபராத கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த புதிய அபராத கட்டண உயர்வு நேற்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துவிட்டது. மேற்கு வங்காள மாநிலத்தில் இந்த புதிய அபராத கட்டண திட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அமலுக்கு வரவில்லை
சென்னை உள்பட தமிழகத்திலும் புதிய அபராத கட்டண உயர்வு நேற்று அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து போலீசார் பழைய அபராத தொகையையே விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு நேற்று விதித்தனர். இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இதுபற்றி போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, “புதிய அபராத கட்டண தொகையை வசூலிக்க தமிழக அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. தமிழக அரசு அனுமதி வழங்கியபிறகு புதிய அபராத கட்டண தொகை நடைமுறைப்படுத்தப்படும்”, என்றனர்.
இந்த வாரம்
போக்குவரத்து விதிமீறல் அபராதம் உயர்வு தமிழகத்தில் அமல்படுத்தப்படாதது குறித்து, தமிழக அரசின் போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மோட்டார் வாகனச் சட்ட திருத்தங்கள் தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை கடந்த புதன்கிழமை தமிழக அரசுக்கு கிடைக்கப் பெற்றது. பொதுவாக, போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை அமல்படுத்த தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். இந்த புதிய உத்தரவு இந்தவாரம் பிறப்பிக்கப்படும். அதுவரை பழைய உத்தரவே அமலில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story