6,491 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு மாநிலம் முழுவதும் 13 லட்சம் பேர் எழுதினர்
6,491 பணியிடங்களுக்கு நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை மாநிலம் முழுவதும் 13 லட்சத்து 59 ஆயிரம் பேர் நேற்று எழுதினர்.
சென்னை,
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), வரி வசூலிப்பவர், நில அளவையாளர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,491 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் குரூப்-4 எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி வெளியிடப்பட்டது.
இந்த தேர்வுக்கு 16 லட்சத்து 31 ஆயிரத்து 647 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,783 விண்ணப்பங்களை தேர்வாணையம் நிராகரித்தது. மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவித்தது.
கடும் கட்டுபாடு
இதனையடுத்து மாநிலம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணி வரை நடந்தது. இந்த தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. தேர்வு அறையில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோரின் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது. செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.
மேலும் சென்னையில் உள்ள பல தேர்வு மையங்களில் தேர்வுகூட கண்காணிப்பாளர்கள், தேர்வர்களை மோதிரம் அணிந்து தேர்வு அறைக்கு செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதித்தனர். இதனால் தேர்வர்கள், முன்கூட்டியே கூறியிருந்தால் மோதிரம் அணியாமல் வந்திருப்போம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மோதி ரத்தை கழற்றி வைத்த பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
13½ லட்சம் பேர்
மாநிலம் முழுவதும் உள்ள 301 தாலுகா மையங்களில் உள்ள 5,575 மையங்களில் நடந்த இந்த தேர்வை 13 லட்சத்து 59 ஆயிரத்து 307 பேர் எழுதினர். குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் இது 83.4 சதவீதம் ஆகும்.
2 லட்சத்து 70 ஆயிரத்து 557 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தால், ஒரு பதவிக்கு 209 பேர் போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முரண்பாடாக இருந்த கேள்வி
தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில், கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கேட்கப்பட்டிருந்தது. குரூப்-4 வினாத்தாளில் இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படை கடமை குறித்து விளக்குகிறது என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது. இந்த கேள்வியின் ஆங்கில மொழி பெயர்ப்பில் அடிப்படை உரிமைகள் என கேட்கப்பட்டிருந்தது. இதைப்போல் மற்றொரு கேள்வியில் ‘டி’ பிரிவில், ஆங்கிலத்தில் ‘முதல் மக்களவையை கலைத்த நாள்’ என உள்ளது. ஆனால் தமிழில் ‘குடியரசுதினம்’ என அச்சிடப்பட்டுள்ளது.
இதனால் தேர்வர்கள் அனைவரும் எந்த கேள்வி சரியானது என குழம்பினர். மேலும் இவ்வாறு முரண்பாடாக கேட்கப்பட்ட கேள்விக்கு கருணை மதிப்பெண் தேர்வாணையம் வழங்குமா? என தேர்வர்கள் புலம்பியவாறு சென்றனர்.
Related Tags :
Next Story