விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
விநாயகர் சதுர்த்தி இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவதையொட்டி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘ஐந்து கரத்தான் என்று அழைக்கப்படும் விநாயகப்பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாளில், வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும்’ என்று கூறியுள்ளார்.
இதேபோல் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வேழ முகத்தோனை இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டு, அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று, நோய்நொடி இல்லாப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற எங்களது விருப்பத்தை தெரிவித்து, அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.
டி.டி.வி.தினகரன், சரத்குமார்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தனது வாழ்த்து செய்தியில், ‘ஞான முதல்வராக திகழும் விநாயகரை வழிபட்டால், சொல்வளம், பொருள் வளம், மனவளம், உடல்நலம் என நல்வாழ்வுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் என்று தமிழ் மூதாட்டி அவ்வையார் பாடியிருக்கிறார். அவரது வாக்கினை போலவே இந்த நன்னாளில் துன்பங்கள் அகன்று, வளமும், நலமும் பெருகட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘விநாயகர் சதுர்த்தி நன்னாளில் மக்கள் அனைவரும் எடுக்கும் நல்ல முயற்சிகள் அனைத்திலும் உள்ள தடைகள் நீங்கி வெற்றியும், மகிழ்வும், மனநிறைவும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு கணநாதனை வேண்டி மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
தேவநாதன் யாதவ், என்.ஆர்.தனபாலன்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தி.தேவநாதன் யாதவ் தனது வாழ்த்தில், ‘விநாயகர் சதுர்த்தி நாளில் எல்லாத்துறையிலும் வளர்ச்சி பெற்று உலகில் முதல்நிலை நாடாக இந்தியா உருவாக விநாயகரை வணங்குவோம்’ என்று கூறியுள்ளார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், ‘இறை பக்தியும், மனிதநேயமும், தலைத்தோங்கவும் மனிதவளம் மேம்படவும் அனைவருக்கும் விநாயகப்பெருமானின் அருள் கிடைக்க வேண்டும் என்று போற்றி வணங்குகிறேன்’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கழக நிறுவனத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், ‘மக்கள் அனைவரும் நாட்டில் சாதி, மத பேதமின்றி வாழ, ஆதி முதற் கடவுள் விநாயகனை வணங்கி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
பாரிவேந்தர்
இதேபோல், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி., கோகுல மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஆ.மணி அரசன் உள்ளிட்டோரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story