‘ஆன்மிகம் ஒற்றுமையாக இருக்கிறது; அரசியல் தான் பிரிக்கிறது’ மதநல்லிணக்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பேச்சு


‘ஆன்மிகம் ஒற்றுமையாக இருக்கிறது; அரசியல் தான் பிரிக்கிறது’ மதநல்லிணக்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பேச்சு
x
தினத்தந்தி 2 Sept 2019 3:30 AM IST (Updated: 2 Sept 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

‘ஆன்மிகம் ஒற்றுமையாகத்தான் இருக்கிறது, அரசியல் தான் பிரிக்கிறது’ என்று மதநல்லிணக்க மாநாட்டில் கவிஞர் வைரமுத்து பேசினார்.

சென்னை, 

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் ‘மதவெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம்’ என்ற தலைப்பில் மதநல்லிணக்க மாநாடு சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. மு.சத்தியவேல் முருகனார் தலைமை தாங்கினார். மாநாட்டில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்திய தேசிய கொடிக்கு ஒரு பள்ளி மாணவன் சொன்ன பொருளை என்னால் மறக்க முடியவில்லை. மேலே உள்ள காவி நிறம் இந்து மதத்தின் குறியீடு, நடுவிலுள்ள வெள்ளை நிறம் கிறித்துவத்தைக் குறிக்கிறது. பச்சை வண்ணமோ இஸ்லாத்தை சுட்டுகிறது. எங்கள் தேசிய கொடியிலேயே மதநல்லிணக்கம் பட்டொளி வீசிப்பறக்கிறது என்றான் அவன். ஒரு பள்ளி மாணவன் கற்பித்துக்கொண்ட பொருளை இந்த பாரத நாடு புரிந்துகொண்டால் நாட்டில் பேதம் இல்லை, பிளவு இல்லை.

அரசியல் தான் பிரிக்கிறது

மதவாதம் என்பது மக்கள் விரோதம். மதநல்லிணக்கம் என்பதுதான் இந்த மண்ணின் குணம். நாகூர் தர்காவில் இந்துக்கள் முடி இறக்குகிறார்கள். வேளாங்கண்ணியில் இஸ்லாமியர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். தஞ்சாவூர் மாரியம்மனுக்கு அனைத்து மதத்தினரும் காணிக்கை செலுத்துகிறார்கள். ஆன்மிகம் ஒற்றுமையாகத்தான் இருக்கிறது, அரசியல் தான் பிரிக்கிறது.

ஒரு நல்ல மதத்தின் நல்லியல்பே அதன் சகிப்புத்தன்மை தான். தியாகத்தின் வேர்களில் தான் சமாதான பூ பூக்கிறது. பேராசிரியர் அருணன் கேட்ட ஒரு கேள்வி ஆக்கபூர்வமானது. ‘தன் அரியணை துறந்து தேசத்தையே விட்டுக்கொடுத்தவன் ராமன். அப்படிப்பட்ட ராமனா ஒரு வழிபாட்டுத் தலத்தை கைப்பற்றுவான்?’ நல்ல மதம் ஆக்கத்துக்கு பிறந்ததேயன்றி ஆக்கிரமிக்க பிறந்ததல்ல.

நிலவில் இந்தியா

மனிதன் அச்சப்பட்டபோது கடவுள் பிறந்தார். அரசு அச்சப்பட்டபோது மதம் பிறந்தது. சிறுபான்மை பெரும்பான்மையை வென்றுவிடும் என்று எந்த அரசும் அச்சப்படத் தேவையில்லை. உடல்மீது உடலும், மொழி மீது மொழியும், மதத்தின் மீது மதமும் திணிக்கப்படுவது தான் மன்னிக்க முடியாத வன்முறை. இந்துக்கள் காக்கப்பட வேண்டும் என்பதைப்போலவே இந்தியர்களும் காக்கப்பட வேண்டும்.

மதநல்லிணக்கத்தால் நாடு முற்போக்கு பாதையில் முன்னேறட்டும். இந்தியா நிலவில் ஏறிக்கொண்டிருக்கும் காலத்தில் இந்தியன் பாதாளத்தில் இறங்கிவிடக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் வரவேற்றார். விழாவில் தாமன்பிரகாஷ் ரத்தோட், பிஷப் ஏ.எம்.சின்னப்பா, மாதவன் ராமானுஜ தாசர், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ஒருங்கிணைப்பாளர் அருணன் உள்ளிட்ட பலர் பேசினார்கள். நிர்வாகி தாவூத் மியான்கான் நன்றி கூறினார்.

Next Story