வங்கிகள் இணைப்பு காரணமாக வங்கி ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் இல்லை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
வங்கிகள் இணைப்பு காரணமாக ஊழியர்கள் யாரும் பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னை,
மத்திய அரசு வரி வருவாயை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக வருமானவரித்துறை, நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்புத்துறை அதிகாரிகளுடன் அவ்வப்போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தி உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வருமானவரித்துறை, நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்புத்துறை அதிகாரிகளுடன் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் வணிகர்கள், தனிநபர்களுக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்காமல் அவர்களே வரியை செலுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிர்மலா சீதாராமன் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பேட்டி
இதன்பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வரி வசூல் நல்ல நிலையில் உள்ளது. மக்களை துன்புறுத்தாமல் வரி வசூலை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஆட்டோமொபைல் துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தவறான கருத்து பரப்பப்படுகிறது. மாசு கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு பி.எஸ்.4 ரக வாகனங்களை பி.எஸ்.6 ரக வாகனங்களாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாற்ற கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆட்டோமொபைல் துறை
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஒவ்வொரு கட்டமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் பி.எஸ்.6 ரக வாகன உதிரிபாகங்களை தயாரிக்கும் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளன.
மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி, குறைவாக விதிக்கப்படுவதால் அந்த வாகனங்களின் பயன்பாடு அதிகம் என்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற வாகனங்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். பி.எஸ்.6 ரக வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் வருகையால் பி.எஸ்.4 ரக வாகனங்கள் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை வைத்துக்கொண்டு ஆட்டோமொபைல் துறையில் பின்னடைவு என்பது சரியானது அல்ல.
ஜி.எஸ்.டி. குறைக்க...
ஆட்டோமொபைல் உற்பத்திகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் நிறுவனத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் ஜி.எஸ்.டி. கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கான பரிந்துரைகளை நிதித்துறை மேற்கொள்ளும்.
புள்ளி விவரம் இல்லை
பொருளாதார பின்னடைவால் வாகன உற்பத்தி சரிவடைந்து 3½ லட்சம் பேர் வேலை இழந்திருப்பதாக கூறப்படுவதற்கு எந்த புள்ளி விவரமும் இல்லை. பெரிய நிறுவனங்களை பொறுத்தமட்டில் வேலை இழப்பு எதுவும் இல்லை.
சிறு, குறு நிறுவனங்களை பொறுத்தமட்டில் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் தற்போது தான் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த புள்ளிவிவரங்களை பெற்றால் மட்டுமே அமைப்பு சாரா நிறுவனங்களில் வேலை இழப்பு உள்ளதா? என்பதை தெரிவிக்க முடியும்.
ஊழியர்கள் நீக்கம் இல்லை
பொதுவாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அதிக நிதி தரப்படுகிறது. இதன்மூலம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பலவற்றின் நிதி நிலை உயர்ந்துள்ளது. வங்கிகளின் நிதிநிலை செயல்பாட்டை செம்மைபடுத்தும் நோக்கத்தில் பல வங்கிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த வங்கியும் மூடப்படாது.
வங்கி ஊழியர்கள் யாரும் பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து துணை வங்கிகளும் இணைக்கப்பட்ட போதும், பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவை இணைக்கப்பட்ட போதும் வங்கிகளின் செயல்பாடுகளில் எந்த பின்னடைவும் ஏற்படவில்லை.
இந்த வங்கிகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் யாரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பொருளாதாரம் வீழ்ச்சியா?
இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் போன்றோர் கருத்து தெரிவித்து இருப்பது குறித்து நிருபர்கள் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பிய போது, “இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.
மூத்த பத்திரிகையாளர்கள் மத்தியில் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “பொதுமக்களுக்கு அளிக்கும் கடன் மூலம் கிடைக்கும் வட்டி மூலமே வங்கிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் அலகாபாத் வங்கிகளில் ஏராளமானோர் சேமிப்பு, நடப்பு கணக்கு வைத்துள்ளனர். பொதுவாக அவர்கள் கடன் கேட்பது இல்லை. மற்ற இடங்களில் உள்ள இந்தியன் வங்கிகளில் நிறைய பேர் கடன் கேட்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கடன் கொடுக்க போதிய நிதி இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் வங்கிகளை இணைப்பதன் மூலம் தாராளமாக நிதி கிடைக்கும். இதன்மூலம் பலருக்கு கடன் வழங்க முடியும். வங்கிக்கும் வருமானம் கிடைக்கும்” என்றார்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
“ரிசர்வ் வங்கி ரெப்போரேட் வட்டியை குறைத்து உத்தரவு பிறப்பிக்கும் போது, வங்கிகளும் அதற்கேற்ற வகையில் கடன்களுக்கான வட்டியை குறைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். இதுபோன்ற நிலையில் தபால் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு வட்டியையும் குறைத்து விடுகிறார்கள். இதனால் மூத்த குடிமக்கள் பாதிக்கப்படுகிறார்களே?” என்று மூத்த பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
அதற்கு நிர்மலா சீதாராமன், “மூத்த குடிமக்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முடிவுகள் எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
பேட்டியின்போது மத்திய வருவாய் துறை செயலாளர் அஜய்பூஷன் பாண்டே, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பி.சி.மோடி, மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் தலைவர் பிரணாப்குமார் தாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story