சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது - இந்திய விஞ்ஞானிகள் சாதனை


சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது - இந்திய விஞ்ஞானிகள் சாதனை
x
தினத்தந்தி 2 Sep 2019 11:45 PM GMT (Updated: 2 Sep 2019 11:00 PM GMT)

சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. இது ஒரு புதிய மைல் கல் சாதனையாக பார்க்கப்படுகிறது.

சென்னை,

விண்வெளி திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியா, வல்லரசு நாடுகளுக்கு சற்றும் சளைத்ததாக இல்லை.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் விஞ்ஞானிகள், உலகின் எந்தவொரு நாட்டினாலும் இதுவரை ஆராயப்படாத நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய்ந்து அறிவதற்கு ரூ.1,000 கோடி செலவில் சந்திரயான்-2 என்ற விண்கல திட்டத்தை கையில் எடுத்ததே இதற்கு சான்று.

சந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 5 முறை உயர்த்தப்பட்டது.

கடந்த மாதம் 14-ந் தேதி, அதிகாலை 2.21 மணிக்கு பெங்களூரு அருகேயுள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சமிக்ஞை மூலம் சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள என்ஜின் இயக்கப்பட்டது. அதையடுத்து சந்திரயான்-2 பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

ஆகஸ்டு 20-ந் தேதி, பெங்களூரு தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலத்தின் என்ஜினை விஞ்ஞானிகள் 1,738 வினாடிகள் இயக்கினர். அதைத் தொடர்ந்து சந்திரயான்-2 நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.

தொடர்ந்து ஆகஸ்டு 21, 28, 30 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி என அதன் பாதை மாற்றி அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாற்றியமைக்கப்பட்ட பின்னர் சந்திரயான்-2 நிலவுக்கு 119 கி.மீ. அருகிலும், 127 கி.மீ. தொலைவிலும் சுற்றி வந்தது.

இந்த நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் (சுற்றுவட்டக்கலன்) இருந்து விக்ரம் லேண்டர் நேற்று மதியம் சரியாக 1.15 மணிக்கு வெற்றிகரமாக பிரிந்தது.

இந்த சந்திரயான்-2 திட்டத்தில் இது ஒரு புதிய மைல் கல் சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஆர்பிட்டரில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், தற்போது நிலவுக்கு 119 கி.மீ. அருகிலும், 127 கி.மீ. தொலைவிலும் சுற்றி வருகிறது.

இன்று விக்ரம் லேண்டர், நிலவுக்கு இன்னும் அருகில் கொண்டு வரப்படும். அதாவது, நிலவுக்கு 109 கி.மீ. அருகிலும், 120 கி.மீ. தொலைவிலும் சுற்றி வருமாறு செய்யப்படும்.

நாளை (புதன்கிழமை) அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் விக்ரம் லேண்டர் நிலவுக்கு மிக அருகில், அதாவது 36 கி.மீ. அருகிலும், 110 கி.மீ. தொலைவிலும் சுற்றுமாறு கொண்டு வரப்படும்.

7-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கி 2.30 மணிக்குள் விக்ரம் லேண்டர் இன்னும் அருகே கொண்டு வரப்படும். அதையடுத்து அது மெதுவாக நிலவின் தென்பகுதியில் தரை இறங்கும்.

அதன் பிறகு சில மணி நேரத்தில், 6 சக்கரங்களை கொண்ட பிரக்யான் ரோவர் (ரோபோ), விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி மிகவும் மெதுவாக நிலவின் தென் துருவப்பகுதியில் தரை இறங்கி ஊர்ந்து செல்லும்.

சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் ஓராண்டு காலம் ஆராய்ச்சிப்பணியில் ஈடுபடும். விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் 14 நாட்கள் ஆராய்ச்சிப்பணியை நடத்தும்.

சந்திரயான்-2 திட்டம் பற்றி இஸ்ரோ விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தபோது, “சந்திரயான்-2 வின் நோக்கம், நிலவைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துவது ஆகும். மேலும் இதன்மூலம் மேற்கொள்ளப்படும் கண்டுபிடிப்புகள், இந்தியாவுக்கு மட்டும் இல்லாது ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பயன் அளிக்கும். இந்த நுண்ணறிவும், அனுபவங்களும் இனி வரும் காலத்தில் நிலவுக்கு மேற்கொள்ளும் பயணங்கள் எப்படி அமைதல் வேண்டும் என்பதற்கு வழிகாட்டுவதாக அமையும்” என கூறினர்.

இஸ்ரோவின் தலைவர் டாக்டர் சிவன் கூறும்போது, “ சந்திரயான்-2 திட்டமானது, நிலவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை நன்கு புரிந்து கொள்வதற்கு உதவும். அத்துடன் விரிவான நிலப்பரப்பு ஆய்வுகள், கனிம இயல் பகுப்பாய்வுகள், நிலவின் மேற்பரப்பில் பல ஆய்வுகள் செய்யவும் உதவும்” என குறிப்பிட்டார்.

Next Story