தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல்; விரைவில் தமிழில் வெளியாகும் -சி.வி.சண்முகம்
தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் தீர்ப்புகள் தமிழில் வெளியாகும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
சென்னை,
சென்னை பசுமை வழிச்சாலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-
முதல்வரின் வெளிநாட்டு பயணம் நல்ல ஆக்கப்பூர்வமான பயணம். ஒரு அரசுக்கு உள்நாட்டு முதலீடுகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு முதலீடுகளும் தேவை. நாம் அவர்களை நாடி சென்று தமிழகத்தின் நிலையை எடுத்து சொல்லி, படித்த மாணவர்கள் இருக்கிறார்கள், இந்தியாவில் அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்பதையெல்லாம் எடுத்துக்கூறினால்தான் அவர்கள் இங்கு முதலீடு செய்ய வாய்ப்பு உருவாகும்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை கவர தீவிரமாக செயல்பட்டு வரும் முதல்வரை பாராட்ட மனமில்லாமல் பொறாமையால் ஸ்டாலின் பொங்கி வழிகிறார். யாராவது எழுதி தருவதை சொல்வதுதான் ஸ்டாலினுக்கு வேலை. அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது.
7 பேர் விடுதலையில் முதலில் முயற்சி எடுத்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான். இன்று நீலி கண்ணீர் வடிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 7 பேர் விடுதலைக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பேசியவர் ஜெயலலிதா, 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவோம். தீர்ப்புகளை மொழிமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தொடர்ந்து தமிழில் வர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழில் மொழிபெயர்ப்பதில் அவர்களுக்கு சிக்கல் இருந்தால் அதற்கு உதவ தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளும் தமிழில் வருவதற்கான பணிகளை செய்து வருவதாக தலைமை நீதிபதி தமிழக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்த அவர், விரைவில் தீர்ப்புகள் தமிழில் வெளியாகும். மொழிமாற்றம் செய்வதற்கான மென்பொருள் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.
Related Tags :
Next Story