தபால் அலுவலகங்களில் ஆதார் எண் மூலம் பண பரிமாற்ற சேவை தொடக்கம்


தபால் அலுவலகங்களில் ஆதார் எண் மூலம் பண பரிமாற்ற சேவை தொடக்கம்
x
தினத்தந்தி 4 Sept 2019 12:38 AM IST (Updated: 4 Sept 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

தபால் அலுவலகங்களில் ஆதார் எண் மூலம் பண பரிமாற்ற சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

சென்னை,

இந்திய தபால் துறை வங்கி (இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி) தொடங்கி ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி ஆதார் எண் மூலம் பண பரிமாற்ற சேவைகள் தொடக்க விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நேற்று நடந்தது. இந்த சேவையை தமிழ்நாடு வட்ட தபால் துறை தலைவர் சம்பத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தபால் வங்கி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி கடந்த 1-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரை ‘அனைவருக்கும் வங்கி சேவை’ வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆதார் அட்டை சார்ந்த பணி பரிமாற்ற சேவை தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ‘ஒரே வங்கி ஒரே நாடு’ என்ற கனவும் நனவாகும். தபால் அலுவலகங்கள் மூலம் கடைகோடி மக்களுக்கும் வங்கி சேவைகள் எளிதில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் அலுவலகங்களை வங்கி சேவை மையங்களாக மாற்றியதன் மூலம் கிராமப்புற வங்கி கட்டமைப்பு 2.5 சதவீதம் அதிகரித்து உள்ளது.

இதற்காக 2½ லட்சம் தபால்காரர்களுக்கு வங்கி சேவை சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் 4 ஆயிரத்து 100 கிராமங்கள் முழுவதும் டிஜிட்டல் மயமாக மாற்றப்பட்டு உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தபால் வங்கி மூலம் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேல் பண பரிமாற்றம் செய்துள்ளனர். 20 லட்சம் பேர் செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 11 ஆயிரத்து 121-க்கும் மேற்பட்ட வங்கி சேவை மையங்கள் உள்ளன. இதில் 8 ஆயிரத்து 580 மையங்கள் கிராமங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. 21 ஆயிரத்து 465 பயிற்சி பெற்ற ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் வங்கி சேவை அளிக்க தயாராக உள்ளனர். தமிழகத்தில் 443 கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தமிழ்நாடு மண்டலம் முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 880 சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் சென்னை வட்ட தபால் துறை தலைவர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story