சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்தில் குளறுபடி: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அரியலூர் கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்தில் குளறுபடி: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அரியலூர் கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Sept 2019 4:00 AM IST (Updated: 4 Sept 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அரியலூர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு கடந்த 2007-ம் ஆண்டு நேர்முக தேர்வு மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பி.ஆண்டாள் என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அதே ஆண்டு செப்டம்பர் 20-ந்தேதி பணி நியமன உத்தரவை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

அதன்படி அவர் பணியில் சேர சென்றபோது, வட்டார வளர்ச்சி அலுவலர் அவரை பணியில் சேர அனுமதிக்கவில்லை. சத்துணவு அமைப்பாளர் பதவி, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது என்று அவர் காரணம் கூறினார். இதுகுறித்து கலெக்டரிடம் முறையீட்டும் எந்த பலனும் இல்லாததால் ஆண்டாள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த ஐகோர்ட்டு, அவரது கோரிக்கையை பரிசீலிக்க கலெக்டருக்கு 2007-ம் ஆண்டு அக்டோபர் 4-ந்தேதி உத்தரவிட்டது. இதுபற்றி கலெக்டர் விசாரணை நடத்தி ஆண்டாளுக்கு வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்த ஆண்டாள், ‘ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி கலெக்டர் விசாரணை நடத்தவில்லை. அதற்கு மாறாக என்னுடைய பணி நியமன உத்தரவை ரத்து செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரர் கடந்த 2007-ம் ஆண்டு தனது 34 வயதில் இந்த பணிக்கு விண்ணப்பித்து, பணி ஆணையும் பெற்றுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவரை பணி அமர்த்தவில்லை. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை.

தற்போது அரசு பணிக்கு சேர தகுதியான வயதை மனுதாரர் கடந்து விட்டார். எனவே, பணி நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடியால், மனுதாரருக்கு மிகப்பெரிய இழப்பும், மனதளவில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே, ரூ.10 லட்சத்தை 8 வாரத்துக்குள் அரியலூர் மாவட்ட கலெக்டர் இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story