கவர்னர் பதவி: தமிழக பிரதிநிதியாகவும், தெலுங்கானாவின் சகோதரியாகவும் செயல்படுவேன் - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


கவர்னர் பதவி: தமிழக பிரதிநிதியாகவும், தெலுங்கானாவின் சகோதரியாகவும் செயல்படுவேன் - டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 4 Sept 2019 5:30 AM IST (Updated: 4 Sept 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா மாநில கவர்னர் பதவிக்கான அதிகாரப்பூர்வ ஆணையை பெற்றுக் கொண்ட டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தின் பிரதிநிதியாகவும், தெலுங்கானாவின் சகோதரியாகவும் செயல்படுவேன் என்று கூறினார்.

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவராக இருந்து வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக கடந்த 1-ந் தேதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில், தெலுங் கானா கவர்னர் பதவிக்கான அதிகாரப்பூர்வ ஆணையை தெலுங்கானா பவன் அலுவலக கமிஷனர் வேதாந்தம் கிரி நேற்று சென்னை சாலிகிராமத்தில், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து வழங்கினார்.

இதைத்தொடர்ந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கானாவின் கவர்னராக நியமிக்கப்பட்ட ஆணையை தெலுங்கானா பவன் அலுவலக கமிஷனர் வேதாந்தம் கிரி என்னிடம் ஒப்படைக்க வந்து இருக்கிறார். இது தமிழகத்துக்கும், என் வாழ்க்கைக்கும் மகிழ்ச்சியான தருணம்.

தமிழகத்தின் மகளாக தமிழகத்தில் இருந்து கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக, ஒரு தேசிய கட்சியின் (பா.ஜனதா) அங்கத்தினராக இருந்த நான் இன்று ஒரு கவர்னராக செல்கிறேன் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருக்கிறது. தமிழகத்துக்கும், தெலுங்கானாவுக்கும் பாலமாக இந்த தமிழ் மகள் செயல்படுவாள்.

எனக்கு இந்த பதவியை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தேசிய தலைவர் அமித்ஷாவுக்கும், செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று தமிழக பா.ஜனதா பொறுப்பாளர்களான முரளிதரராவ், சந்தோஷ் ஆகியோருக்கும், கோடான கோடி தமிழக மக்களுக்கும், லட்சோப லட்சம் பா.ஜனதா தொண்டர்களுக்கும், கடவுளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நான் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும், தெலுங்கு மக்களின் சகோதரியாகவும் செல்கிறேன். எல்லாவற்றிலும் வெற்றி பெற்று தான் பழக்கம். எனவே, தெலுங்கானா கவர்னராகவும் சிறப்பாக செயல்படுவேன் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story