ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இணைவதால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது -அமைச்சர் செல்லூர் ராஜூ
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் இணைவதால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை போரூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் 70-வது கிளையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்து 279 பயனாளிகளுக்கு 2 கோடியே 35 லட்சம் ரூபாய் அளவுக்கு தொழில் கடன் வழங்கினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் இணைவதில் எந்த தவறும் இல்லை. இதனால் தமிழக மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
மேலும், இந்த திட்டத்தில், ஒருவர் எங்கு பொது விநியோக பொருட்கள் வாங்கினாலும், அவர்களது மாநிலத்தில் உள்ள பொது விநியோக சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் பொருட்கள் வழங்கப்படும். மேலும் வெளிமாநிலத்தவரின் குடும்ப அட்டை தகவல்கள் ஆன்லைன் மூலம் மத்திய தொகுப்பிற்கு அனுப்பி, அதற்கு ஏற்றார் போல அரிசி பெற்றுக்கொள்ளப்படும் என்பதால் தமிழகத்தில் தட்டுபாடு ஏற்படாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டதை பாராட்டி மத்திய அரசின் பாராட்டு சான்றிதழையும் முப்பது கோடி ரூபாய் ஊக்கத்தொகையையும் தமிழகம் பெற்றுள்ளது.
முதலமைச்சர் தனது வெளிநாடு பயணம் குறித்து நாடு திரும்பியதும் விரிவாக விளக்கம் அளிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story