பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்ட தங்கம்; மாலையில் சற்று விலை குறைந்தது


பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்ட தங்கம்; மாலையில் சற்று விலை குறைந்தது
x
தினத்தந்தி 5 Sep 2019 12:17 AM GMT (Updated: 5 Sep 2019 12:17 AM GMT)

தங்கம் விலை நேற்று காலையில் ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தொட்டு, மாலையில் குறைந்து, ரூ.29 ஆயிரத்து 928-க்கு விற்பனை ஆனது.

சென்னை, 

தங்கம் விலை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை தொட்ட நிலையில், அதற்கு அடுத்த 5 நாட்களிலேயே ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தையும் கடந்தது. தொடர்ந்து விலை உயர்ந்து கடந்த 13-ந்தேதி ரூ.29 ஆயிரத்தையும் தாண்டி வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக ரூ.29 ஆயிரத்துக்கும், ரூ.30 ஆயிரத்துக்கும் இடையே தங்கம் விலை கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது. அதிலும் கடந்த 5 நாட்களாக மீண்டும் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்றும் விலை உயர்ந்து இருந்தது.

நேற்று காலை நேர நிலவரப்படி, பவுனுக்கு ரூ.288 என தாறுமாறாக எகிறி, ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 120-க்கு விற்பனை ஆனது. ஆனால் மாலையில் சட்டென்று விலை குறைந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 729-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 832-க்கும் விற்பனை ஆனது. மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.12-ம், பவுனுக்கு ரூ.96-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 741-க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 928-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 5 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.472 அதிகரித்து இருக்கிறது.

தங்கம் விலை காலையில் ரூ.30 ஆயிரத்தை தொட்டதால், மேலும் விலை அதிகரித்து விடுமோ? என்று பொதுமக்கள் பலர் கருதி, நகைக்கடைகளில் அவர்களுக்கு தேவையான நகைகளை வாங்க வந்தனர். விலை அதிகரித்தாலும் சாதாரண நாட்களை விட கூட்டம் அதிகமாகவே இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள லலிதா ஜூவல்லரியில் நேற்று காலையில் இருந்தே மக்கள் கூட்டம் இருந்தது. பெரும்பாலானோர் ஆர்வமுடன் வந்து நகைகளை வாங்கிச் சென்றனர்.

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது. நேற்று மாலையில் கிராமுக்கு 2 ரூபாய் 20 காசும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம் அதிகரித்து, ஒரு கிராம் 54 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.54 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

Next Story