தங்கம் விலை உயர்வு அச்சத்தை தருகிறது; பொதுமக்கள் கருத்து


தங்கம் விலை உயர்வு அச்சத்தை தருகிறது; பொதுமக்கள்  கருத்து
x
தினத்தந்தி 5 Sept 2019 6:08 AM IST (Updated: 5 Sept 2019 6:23 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை உயர்வு அச்சத்தை தருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் மனநிலை குறித்து அவர்களிடம் கேட்டபோது கூறியதாவது:–

சென்னை கே.கே.நகரை சேர்ந்த சுமதி:–

என்னுடைய மகள் திருமணம் ஐப்பசி மாதம் நடைபெற இருக்கிறது. அதற்காக நகை எடுக்க வந்தோம். மற்ற துறைகள் மந்தமாக இருக்கும் நிலையில், தங்கம் மட்டும் தான் உச்சத்தில் இருக்கிறது. தொடர்ந்து இப்படி விலை அதிகரித்து கொண்டே சென்றால், எப்படி வாங்க முடியும்?.

கடந்த 2 மாதங்களாக கட்டுக்கடங்காமல் விலை உயர்ந்து இருக்கிறது. ஏற்கனவே திருமண நிச்சயம் செய்து இருந்தவர்களுக்கு இந்த விலை உயர்வு கஷ்டத்தையும், அச்சத்தையும் தருகிறது. இனிமேல் திருமண ஏற்பாடு செய்பவர்கள் சற்று சுதாரித்து கொள்வார்கள்.

தண்டையார்ப்பேட்டையை சேர்ந்த பாபுராஜ்:–


மகளின் திருமண நிச்சயத்துக்கு நகை எடுக்க வந்தோம். தங்கம் விலை குறையும், குறையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் குறைந்தபாடில்லை. பிள்ளைக்கு நகை செய்து கொடுத்து தான் ஆகவேண்டும். அது மாறப்போவது இல்லை. 

நகை விலை குறைய வேண்டும். தொடர்ந்து இப்படி அதிகரித்து கொண்டே சென்றால் ஏழை–எளிய மக்களுக்கு நகை, பகல் கனவு போல் ஆகிவிடும். 

பெரும்பாக்கத்தை சேர்ந்த கீதா:–

நகைக்காக சீட்டு கட்டி வந்தேன். அதன் காலம் நிறைவடைந்த நிலையில், கட்டிய பணத்துக்கு நகை எடுத்தேன். பவுனுக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.3 ஆயிரம் வரை அதிகரித்து இருக்கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டிய பணத்துக்கு ஏற்றவாறு நகை எடுத்து இருக்கிறேன்.

அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த அப்துல்ரஷீத்:–

என்னுடைய பேத்தியின் கல்யாணத்துக்கு நகை எடுக்க குடும்பத்துடன் வந்தோம். விலை உயர்வால், நாங்கள் நினைத்த நகைகளை வாங்க முடியவில்லை. இப்படி விலை அதிகரித்தால், நல்ல காரியங்களுக்கு நகை வாங்குவது கஷ்டமாக மாறிவிடும். நான் ஒரு பவுன் ரூ.240 என்று இருந்ததில் இருந்து தங்கம் வாங்கி வருகிறேன். இப்போது ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்துக்கு வந்துவிட்டது. இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தரமணியை சேர்ந்த ஹேமலதா:–

மகளின் திருமணத்துக்கு நகை எடுக்க வந்தோம். தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து இருக்கிறது. இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை?. வேறு வழியும் இல்லை. பிள்ளைகளுக்கு நகை வாங்கித்தானே ஆக வேண்டும். ஆகவே வாங்குகிறோம். கடந்த 2010–ம் ஆண்டு ஒரு திருமண நிகழ்வுக்காக நகை வாங்கினோம். அதனோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இப்போதைய விலை தலைசுற்றுகிறது. 

Next Story