படகு கவிழ்ந்து கடலில் மாயமான ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் மீட்பு - மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரம்


படகு கவிழ்ந்து கடலில் மாயமான ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் மீட்பு - மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 Sept 2019 1:06 AM IST (Updated: 6 Sept 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 4 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருவாரூர்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த 2-ந் தேதி புதிய படகு வாங்குவதற்காக கடலூருக்கு சென்றனர். அங்கிருந்து புதிய ரக நாட்டுப்படகு ஒன்றை வாங்கிக்கொண்டு, 3-ந் தேதி கடல் வழியாக ராமேசுவரத்துக்கு படகில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அந்த படகில் ராமேசுவரத்தை சேர்ந்த முனியசாமி, ரஞ்சித்குமார், மதன், இலங்கேஸ்வரன், தரக்குடியான், காந்திகுமார், செந்தில்குமார், முனீஸ்வரன், உமாகாந்த், காளிதாஸ் ஆகிய 10 பேர் பயணம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் 10 மீனவர்களும் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர். இதில் செந்தில்குமார், காளிதாஸ் ஆகிய 2 மீனவர்களும் பிளாஸ்டிக் கேனை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் மிதந்துள்ளனர். அவர்களை மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர்.

படகு கவிழ்ந்த அன்று மாலை 6 மணி வரை 10 பேரும் ஒன்றாக பிளாஸ்டிக் கேனை பிடித்தபடி நீந்தி வந்ததாகவும், அதன் பிறகு காற்றின் வேகத்தால் மற்ற 8 பேரும் திசைமாறி மாயமாகி விட்டதாகவும் மீட்கப்பட்ட மீனவர்கள் 2 பேரும் கடலோர காவல் படையினரிடம் கூறினர்.

இந்த நிலையில் கவிழ்ந்த படகின் உடைந்த பாகங்கள் கோடியக்கரை கடல் பகுதியில் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் ராமேசுவரம், நடராஜபுரம் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க செயலாளர் அமுதன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலோர காவல் படையினர் என 19 பேர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முனீஸ்வரன் (வயது 24), தரக்குடியான்(25), முனியசாமி(47), ரஞ்சித்குமார்(23) ஆகிய 4 பேரும் மீட்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக 108 ஆம்புலன்சு மூலமாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாயமான மேலும் 4 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Next Story