கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க - ஐகோர்ட்டு உத்தரவு


கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Sept 2019 1:40 AM IST (Updated: 6 Sept 2019 1:40 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி, பா.ஜ.க. சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் போட்டியிட்டனர். இதில், தமிழிசை சவுந்தரராஜனைவிட 3.47 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று கனிமொழி வெற்றி பெற்றார். இதையடுத்து கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளது. முறையற்ற வகையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது இதுகுறித்து ஆட்சேபனை தெரிவித்தும், தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார்.

கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் பிரஜைகள் என்றும், அதனால் அவர்களின் வருமான விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை என்றும் வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு மாறாக சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் பதிவுச் சான்றிதழை அவர் இணைக்கவில்லை. அதனால், இந்த வேட்புமனு குறைபாடானது. அதுமட்டுமல்லாமல், பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கினார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரி, கனிமொழி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story