ப.சிதம்பரம் கைதை கண்டித்து போராட்டம்: சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் 3 கோஷ்டியாக ஆர்ப்பாட்டம்


ப.சிதம்பரம் கைதை கண்டித்து போராட்டம்: சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் 3 கோஷ்டியாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sep 2019 10:00 PM GMT (Updated: 6 Sep 2019 9:16 PM GMT)

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் 3 கோஷ்டியாக ஆர்ப்பாட்டம், போலீசார் கைது செய்வதற்கு முன்பே வாகனங்களில் அமர்ந்த நிர்வாகிகள்

சென்னை,

ப.சிதம்பரம் கைதை கண்டித்து சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். அப்போது 3 கோஷ்டியாக நிர்வாகிகள் தனித்தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்வதற்கு முன்பாகவே வாகனங்களில் சில நிர்வாகிகள் ஏறி அமர்ந்த ருசிகர சம்பவமும் அரங்கேறியது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், மாநில பொதுச்செயலாளர்கள் ஜி.கே.தாஸ், கே.சிரஞ்சீவி, கீழானூர் ராஜேந்திரன், மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் ஹசீனா சையத், மாவட்ட தலைவர் சிவராஜசேகரன் மற்றும் அகமது அலி, சூளை ராஜேந்திரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சத்தியமூர்த்தி பவன் வாசலில் ஒரு கோஷ்டியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, மாநில பொதுச்செயலாளர் டி.செல்வம் தலைமையில் ஒரு கோஷ்டியினர் வளாகத்துக்குள் தனியாக கோஷம் எழுப்பினர்.

அவர்களை ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா அழைத்து, வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு கூறினார். அதைத் தொடர்ந்து அவர்களும் வாசல் அருகே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கோஷம் எழுப்பிக்கொண்டு இருக்கும் போதே, மாவட்ட தலைவர் வீரபாண்டியன், கைது செய்வதற்காக போலீசார் நிறுத்தி இருந்த வாகனத்துக்குள் தானாக சென்று ஏறினார். அவரை, கைதாக வேண்டாம் என்று ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் கீழே இறங்கினார்.

அடுத்ததாக, குமரி அனந்தன் உள்ளிட்டோர் பத்திரிகையாளர்களை சந்தித்து கொண்டிருந்த போது, முன்னாள் மாவட்ட தலைவர் ராயபுரம் மனோகர் தலைமையில் ஒரு கோஷ்டியினர் திடீரென கோஷம் எழுப்பினர்.

மேலும், யாரும் கைதாக வேண்டாம் என்று ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறிய நிலையில், திடீரென எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் சிலர் போலீஸ் வாகனத்தில் தானாக ஏறி கைதாகினர்.

பின்னர், ஆர்ப்பாட்டம் முடிந்து கலைந்து சென்ற பிறகு ராயபுரம் மனோகர் தலைமையில் சிலர் மீண்டும் திரும்பி வந்து தாங்களாக போலீஸ் வாகனத்தில் ஏறி கைதாகினர். கைது செய்யப்பட்டவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம், தீவிரமாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில், ஏராளமான போலீசார் சாலை முழுவதும் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக மாநகராட்சி பஸ் உள்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களும் வரவழைக்கப்பட்டு இருந்தது.

ஆனால், மொத்தத்தில் 30 ஆண்கள், 5 பெண்கள் மட்டுமே கைதாகியதும், முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளாமல் அணி, அணியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் வேடிக்கையான ருசிகர சம்பவங்களாகவே அமைந்தன.

Next Story