சென்னை மாநகராட்சியில் 13 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு - சென்னை குடிநீர் வாரியம் தகவல்


சென்னை மாநகராட்சியில்  13 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு - சென்னை குடிநீர் வாரியம் தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2019 4:04 AM IST (Updated: 7 Sept 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 13 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு பெரும் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது சென்னை மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது ஏன் இந்த மழை இப்படி பெய்தது? என்று வசைப்பாடினார்கள்.

அதன்பிறகு, 2016, 2017, 2018-ம் ஆண்டுகளில் தொடர்ந்து சென்னை வறட்சியை தான் சந்தித்தது. அதிலும் இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு போனதால் சென்னை கடும் வறட்சியை எதிர்கொண்டது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் தண்ணீர் தட்டுப்பாடு சென்னையின் சில பகுதிகளில் ஆரம்பிக்கும்.

ஆனால் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. இதில் ஒட்டுமொத்த சென்னையும் பாதிப்புக்குள்ளா4:00 AM 9/7/2019
னது.

ஏரிகள் வறண்ட நிலையில், நிலத்தடி நீர் ஓரளவு கைக்கொடுக்கும் என்று எதிர்பார்த்த சென்னை வாசிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்கு சென்றது.

இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து லாரி தண்ணீரை நம்பியே சென்னைவாசிகள் காலத்தை தள்ளினர். ஒரு கட்டத்தில் அந்த தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவியது.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் சென்னை குடிநீர் வாரியம் லாரிகள் மூலம் தெரு, தெருவாக தண்ணீர் சப்ளை செய்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தவர்களும் குடத்தை தூக்கிக்கொண்டு அலையும் நிலை ஏற்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலர் சென்னையை விட்டு காலி செய்து தண்ணீருக்காக புறநகர் பகுதிகளை நோக்கி படையெடுத்தனர். இதற்கு ஒரே தீர்வு மழை மட்டும் தான் என்று பொதுமக்கள் பேசினர். மழைக்காக சிறப்பு யாகங்கள், பிரார்த்தனைகளையும் ஏறெடுத்தனர். 2015-ம் ஆண்டு மழையை வெறுத்த சென்னைவாசிகள், மழைக்காக ஏங்க தொடங்கினர்.

மக்களின் வேண்டுதலுக்கு மழை சற்று கரிசனம் காட்டியது. தென்மேற்கு பருவமழை காலத்தில் பெருமளவு மழை தமிழகத்துக்கு இருக்காது என்றாலும், வெப்பசலனத்தால் அவ்வப்போது மழை இருக்கும். அந்தவகையில், சென்னையில் கடந்த ஜூலை மாதத்தின் இறுதியில் இருந்து மழை சென்னையை அரவணைக்க தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் சென்னை மக்களுக்கு மழை வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால் கடந்த ஜூலை மாதத்தை ஒப்பிடும்போது, ஓரளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதாக சென்னை குடிநீர் வாரியம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களை உள்ளடக்கிய பகுதிகள் இருக்கின்றன. இதில், மாதவரம், திரு.வி.க.நகர் மண்டல பகுதிகளை தவிர மற்ற 13 மண்டலங்களில் கடந்த ஜூலை மாதத்தை காட்டிலும் நிலத்தடி நீர் மட்டம் சற்று உயர்ந்து இருக்கிறது. அதிகபட்சமாக பெருங்குடியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகம் உயர்ந்து இருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

Next Story