அடுத்த 2 ஆண்டுகளுக்கு: புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடையாது - ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் தகவல்


அடுத்த 2 ஆண்டுகளுக்கு: புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடையாது - ஏ.ஐ.சி.டி.இ. தலைவர் தகவல்
x
தினத்தந்தி 7 Sept 2019 4:45 AM IST (Updated: 7 Sept 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த 2 ஆண்டுகளுக்கு புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடையாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் அனில் சகஷ்ரபுத்தே தெரிவித்தார்.

சென்னை,

உயர்கல்வி துறை தொடர்பான கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்துக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.) தலைவர் அனில் சகஷ்ரபுத்தே தலைமை தாங்கினார். இதில் தமிழக உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் உயர்கல்வி துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், மாணவர்களின் படிப்பு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. பின்னர் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு தலைவர் அனில் சகஷ்ரபுத்தே நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் இருக்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால் அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் புதிய என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அந்த கல்லூரிகள் பாலிடெக்னிக் கல்லூரிகளாக மாற்றப்படும் அல்லது கல்லூரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 முதல் 80 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நிலைகள் மாற வேண்டும் என்றால், தொழிற்கல்வியோடு உயர்கல்வி துறை அதிலும் குறிப்பாக என்ஜினீயரிங் கல்லூரிகள் இணைந்து செயலாற்ற வேண்டும்.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால், நடப்பாண்டில் மட்டும் சுமார் 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் சேர்க்கை இருக்கிறது. அந்த கல்லூரிகளை அழைத்து பேச இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து உயர்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா கூறுகையில், ‘தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளுடன் அடுத்த மாதம் உயர்கல்வி துறை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறது.

ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துடன் 10 கல்லூரிகள் இணைக்கப்பட்டு தனியார் நிறுவனங்களின் இன்றைய தேவைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.

Next Story