சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பு
இந்து முன்னணி உள்பட அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை,
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 2-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொது இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், பட்டினப்பாக்கம் சீனிவாச புரம், நீலாங்கரை பல்கலைநகர் ஆகிய 5 இடங்களை காவல் துறை தேர்வு செய்துள்ளது. மேற்கண்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த இடங்களில் மாநகர காவல் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் ராட்சத கிரேன்கள், படகுகள், உயிர் காக்கும் குழுக்கள், நீச்சல் வீரர்கள், மருத்துவக் குழுக்கள், கடற்கரையில் சிலைகளை எளிதாக கொண்டு செல்ல டிராக் வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடைசி கட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் இதுவரை 158 சிலைகள் கரைக்கப்பட்டு உள்ளது.
இந்து முன்னணி உள்பட அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் நடைபெறுவதற்காக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக குறைவான சிலைகளே கடலில் கரைக்கப் பட்டன.
Related Tags :
Next Story