கடையநல்லூர் அருகே அடவிநயினார் அணை மதகு உடைந்ததால் பரபரப்பு
அடவிநயினார் அணை மதகு உடைந்து தண்ணீர் வெளியேறி சாலை துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூர்,
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடவிநயினார் அணை அமைந்துள்ளது. 132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு, சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
பின்னர் அணை முழுவதுமாக நிரம்பியதை அடுத்து கடந்த மாதம் 28-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. நவம்பர் மாதம் 25-ந் தேதி வரை 90 நாட்களுக்கு வினாடிக்கு 60 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டிருந்தது.
அணை திறக்கப்பட்ட அன்றே மதகு வழியாக தண்ணீர் வெளியேறவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மதகு சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து மதகு பணிகள் நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை மதகு திடீரென உடைந்தது. இதனால் மதகில் இருந்து கால்வாய் மேல் சாலையில் இருபுறமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சாலை முழுவதும் பெயர்ந்தது. நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சாலை துண்டிக்கப்பட்டது.
சாகுபடிக்காக சேமித்து வைத்திருந்த தண்ணீர் வீணாக செல்வதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்த னர். இதனை அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். மதகு வழியாக வெளியேறிய தண்ணீர் அங்குள்ள கால்வாய்களில் சென்றதால், அதில் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் செங்கோட்டை தாசில்தார் ஒசானா பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மதகு உடைந்த பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story