சந்திரயான்-2 ரோவர் வாகனத்தின் சோதனை ஓட்டத்துக்கு மண் அளித்த கிராம மக்கள் சோகம் + "||" + Chandrayaan -2 Of the Rover vehicle For the test flow Soil supplied The villagers are sad
சந்திரயான்-2 ரோவர் வாகனத்தின் சோதனை ஓட்டத்துக்கு மண் அளித்த கிராம மக்கள் சோகம்
சந்திரயான்-2 விண்கல திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, ரோவர் வாகனத்தின் சோதனை ஓட்டத்திற்கு மண் அளித்த கிராம மக்கள் சோகம் அடைந்து உள்ளனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூருக்கும், திருச்செங்கோட்டிற்கும் இடையே உள்ளது சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை கிராமங்கள். இந்த கிராமங்களில் ஆய்வு செய்த சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறையினர், நிலவின் மேற்பரப்பில் உள்ள அனார்த்தசைட் மண், பாறை வகைகள் இந்த கிராமங்களில் இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை கிராமங்களில் ஆய்வு செய்தனர். பின்னர் இந்த இரு கிராமங்களில் இருந்தும் சந்திரயான்-2 விண்கலத்தின் ரோவர் வாகனத்தின் சோதனை ஓட்டத்திற்காக சுமார் 50 டன் மண்ணை எடுத்து சென்றனர். பின்னர் இஸ்ரோவில் ரோவர் வாகனத்தின் ஓடுதிறன் பரிசோதனை செய்யப்பட்டது.
தற்போது சந்திரயான்-2 விண்கல திட்டம் சற்று பின்னடைவை சந்தித்து இருப்பதால் ரோவர் வாகனம் சோதனை ஓட்டத்திற்கு மண் அளித்த கிராம மக்கள் மத்தியில் சோகம் காணப்படுகிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்களது கிராமத்தில் இருந்து அதிகாரிகள் மண் எடுத்து சென்றனர். அப்போது எங்களுக்கு எதற்காக மண் எடுக்கப்படுகிறது என்பது தெரியாது. ஆனால் பின்னர் நிலவுக்கு அனுப்பப்படும் சந்திரயான்-2 விண்கலத்தின் ரோவர் வாகன சோதனை ஓட்டத்திற்காக மண் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
நிலவில் உள்ள மண்ணும், எங்கள் பகுதியில் உள்ள மண்ணும் ஒரே வகையை சேர்ந்தது என்பது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது விக்ரம் லேண்டர், நிலவில் இறங்குவதற்கு முன்பு தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பது எங்களுக்கு கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.