கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை,
கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, 814 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 23ந்தேதி மற்றும் 24ந்தேதிகளில் நடந்து முடிந்தது.
எனினும், இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன என குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஜூன் மாதம் 23ந்தேதி நடந்த தேர்வில், சில தேர்வர்கள் கணினியில் இருந்த விடைகளை குறித்துக்கொண்டு மற்றவர்களிடம் பகிர்வதும், விடைகளுக்கு குறிப்பு எடுப்பதுமாக இருந்தனர். மேலும் சிலர் செல்போன் மூலம் விடைகளை பிறருக்கு பகிர்ந்து கொண்டிருந்தனர்.
இதனால் வினாக்கள் தேர்வுக்கு முன்பே கசிந்து உள்ளது என கூறி, நடந்து முடிந்த 2 தேர்வுகளின் முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்து, இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஆசிரியர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த 2 தேர்வையும் ரத்து செய்துவிட்டு, மொத்தம் உள்ள 119 தேர்வு மையங்களிலும் முறையாக மறு தேர்வு நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த செந்தில்முருகன், மதுரை ஐகோர்ட்டில் மனு செய்துள்ளார்.
இந்த வழக்கு சம்பந்தமாக மனுதாரர் கூறியுள்ள புகார்களுக்கு, ஆசிரியர் தேர்வாணையம் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, தேர்வு முடிவுகள் தயாராக உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Related Tags :
Next Story