அரசுமுறை பயணம் வெற்றியடைந்துள்ளது - சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அரசுமுறை பயணம் வெற்றியடைந்துள்ளதாக, சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை,
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது 14 நாள் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாகமுடித்துக்கொண்டு சென்னை திரும்பி உள்ளார்.
அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். கடந்த மாதம் 28 ம் தேதி தனது பயணத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் முதலில் இங்கிலாந்துக்கும், தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார்.
அங்கு, தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமாக உள்ள சூழலை எடுத்துரைத்த முதல்-அமைச்சர், அதிக அளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
முதல்-அமைச்சருடன், அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரும் உடன் சென்றனர். இங்கிலாந்து நாட்டில் முன்னணி மருத்துவமனைகள், கால்நடை பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டனர்.
அமெரிக்காவில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி நியூயார்க் மற்றும் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டனர். பின்னர் அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் துபாய் சென்றனர்.
அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்நிலையில் முதல்-அமைச்சர் தனது 14 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்துவிட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், “அயல் நாட்டில் வாழும் தமிழர்களின் வரவேற்பு மகிழ்ச்சியை தந்தது. அயல்நாட்டு அரசு முறை பயணம் தொடரும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொழிலில் முதலீடு செய்ய பலரும் ஆர்வத்தில் உள்ளனர். சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம். கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர உள்ளன. துபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும். உலகமெங்கும் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும். அரசுப்பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது” என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story