3-வது மனைவி தேடிய கணவரை ரோட்டில் வைத்து அடித்து உதைத்த முதல் 2 மனைவிகள்


3-வது மனைவி தேடிய கணவரை ரோட்டில் வைத்து அடித்து உதைத்த முதல் 2 மனைவிகள்
x
தினத்தந்தி 10 Sept 2019 12:48 PM IST (Updated: 10 Sept 2019 12:48 PM IST)
t-max-icont-min-icon

கோவை சூலுரில் 3-வது மனைவி தேடிய கணவரை முதல் 2 மனைவிகள் ரோட்டில் வைத்து அடித்து உதைத்து உள்ளனர்.

சூலூர்:

 கோவை சூலூர் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவரது மகன் அரங்க அரவிந்த தினேஷ் ( வயது 26). இவர் ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2016- ம் ஆண்டு இவருக்கும், திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமான 15 நாட்களிலேயே அரவிந்த் ,பிரியதர்ஷினியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினார். கொடுமை தாங்கமுடியாத அவர் தனது மாமனார், மாமியாரிடம் நடக்கும் சம்பவங்களை கூறினார். இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதனையடுத்து பிரியதர்ஷினி இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.பின்னர் திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

மனைவி பிரிந்து சென்றதும் தனக்கு திருமணமானதை மறைத்து அரங்க அரவிந்த் திருமண வலைதளத்தில் திருமண தகவல் நிலையம் மூலம் மீண்டும் தனக்கு பெண் தேடினார்.

அப்போது திருமண தகவல் மையம் மூலமாக கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரது மகள் அனுப்பிரியா (23) என்ற பெண்ணை தனது முதல் மனைவிக்கு தெரியாமல் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி 2-வதாக திருமணம் செய்தார்.

அனுப்பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அரங்க அரவிந்த் அனுப்பிரியாவை ஒண்டிப்புதூரில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து வசித்து வந்தார்.

சில மாதங்கள் கடந்ததும் அரங்க அரவிந்த் முதல் மனைவியை கொடுமை படுத்தியது போல அனுப்பிரியாவையும் கொடுமைபடுத்தி உள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த அனுப்பிரியா தனது கணவரை பிரிந்து கரூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். 2-வது மனைவியும் பிரிந்து சென்றதால் அரங்க அரவிந்த் மீண்டும் 3-வதாக திருமணம் செய்வதற்காக திருமண வலைத்தளத்தில் தனக்கு மணப்பெண் தேடினார். இதனை தெரிந்து கொண்ட 2 மனைவிகளின் குடும்பத்தினர் அரவிந்திடம் நேரில் சென்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் அப்படித்தான் செய்வேன். உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.

இதனையடுத்து முதல் மனைவி பிரியதர்ஷினி 2-வது மனைவி அனுப்பிரியா ஆகியோர் அரவிந்த் வேலை பார்த்து வரும் தொழிற்சாலைக்கு சென்று அவரை வெளியே அனுப்பும்படி கூறினர்.

ஆனால் கம்பெனி நிர்வாகம் அவரை வெளியே அனுப்ப மறுத்து விட்டது. அதனையடுத்து 2 மனைவிகளும் கம்பெனி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரங்க அரவிந்தையும், அவரது 2 மனைவிகளையும் போலீஸ் நிலையத்துக்கு வரும்படி கூறினர்.

போலீஸ் நிலையத்துக்கு செல்வதற்காக அரங்க அரவிந்த் கம்பெனியில் இருந்து வெளியே வந்தார். இதனை பார்த்த அவரது 2 மனைவிகளும், அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 2 மனைவிகளிடம் இருந்து அரங்க அரவிந்தை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அரங்க அரவிந்த் மீது அவரது 2- மனைவிகளும் தங்களை ஏமாற்றி திருமணம் செய்து விட்டு, 3-வதாக திருமணம் செய்ய முயன்றதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 மனைவிகளும் சேர்ந்து 3-வதாக பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கணவரை தாக்கிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story