புகழேந்தி விவகாரம்: விசாரித்து நடவடிக்கை எடுப்பேன்- டிடிவி தினகரன்


புகழேந்தி விவகாரம்: விசாரித்து நடவடிக்கை எடுப்பேன்- டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 10 Sept 2019 2:02 PM IST (Updated: 10 Sept 2019 2:02 PM IST)
t-max-icont-min-icon

அமமுக நிர்வாகி புகழேந்தி விவகாரம் தொடர்பாக, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விசாரித்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை,

கோவையில் தனியார் ஓட்டல் ஒன்றில் கட்சியினருடன் அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி பேசிய வீடியோ அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் "இங்கு யாருடனும் இருக்கும் விருப்பம் எனக்கு இல்லை. டிடிவியை ஊர் ஊராகச் சென்று நான் தான் அடையாளப்படுத்தினேன். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் கூட அவர் உடன் இல்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பேன்" என பேசி இருந்தார்.

இது குறித்து பேசிய புகழேந்தி, அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு பேசியதாகவும், முழு வீடியோவை வெளியிட வேண்டும், அதனைப் பார்த்தால் முழுமையாக புரியும் என்று தெரிவித்தார். இது அமமுக கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அமமுகவில் இருந்து பலர் வெளியேறி வரும் நிலையில் புகழேந்தியும் கட்சியை விட்டு வெளியேற போகிறாரா? என பலருக்கும் சந்தேகம் எழுந்தது

இந்நிலையில் புகழேந்தி விவகாரம் குறித்து திருச்சியில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களை  சந்தித்த  டிடிவி தினகரன் கூறியதாவது:- 

புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை. எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீது தீர விசாரித்தபிறகே முடிவு எடுக்கப்பட்டது.

அமமுகவில் இருந்து அதிமுக செல்லாமல் திமுகவுக்கு நிர்வாகிகள் செல்வது அவரவரது விருப்பம், அதை துரோகம் என்று சொல்லமாட்டேன் என கூறினார்.

Next Story