பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் சென்னை ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் உலக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருக்க வேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
சென்னை,
இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்திய ‘ஹேக்கத்தான்’ தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் பேராசிரியர் அனில் டி.சகஸ்ரபுதி வரவேற்றார். சிங்கப்பூர் கல்வி மந்திரி ஒங் யே ஹங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-
ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டுகிறேன். சவால்களை எதிர்கொள்வதற்கும், பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குமான உங்களின் விருப்பம், சக்தி, ஆர்வம் ஆகியவை போட்டியில் வெற்றி பெறுவதை விட மிகவும் மகத்தானதாகும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய தொழில் தொடங்கும் 3 முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அதற்கான முயற்சிகளுக்கு இந்தியா மிகப்பெரும் முக்கியத்துவத்தை அளித்திருக்கிறது. நவீன தொழில்நுட்பங்களை வளர்க்க இந்தியா அதிகமாக செலவிடுகிறது.
அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், பிரதமரின் ஆராய்ச்சி உதவி நிதி, தொடங்குக இந்தியா திட்டம் போன்றவை 21-ம் நூற்றாண்டின் இந்தியாவுக்கான அடிப்படைத் திட்டங்களாகும். புதிய கண்டுபிடிப்பு என்பதை ஒரு கலாசாரமாக இந்தியா மேம்படுத்தி வருகிறது.
எந்திர வழிக்கற்றல், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை 6-ம் வகுப்பில் இருந்தே மாணவர்களுக்கு கற்றுத்தர நாம் இப்போது முயற்சி செய்கிறோம். பள்ளியில் இருந்து உயர்கல்வி வரை ‘ஆய்வு’ என்பது புதிய கண்டுபிடிப்புக்கான சூழலாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தியா எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு எளிதான தீர்வுகளைக் கண்டறிவதற்கு மாணவர்கள் முன்வரவேண்டும். அதுபோன்ற தீர்வுகளை உலகத்திற்கு குறிப்பாக, பல நாடுகளில் உள்ள ஏழைகளுக்கு வழங்க இந்தியா விரும்புகிறது.
வாழ்க்கையை எளிதாக்குவதற்காகவும், ஒட்டுமொத்த உலகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் புதிய கண்டுபிடிப்புகளையும், அதற்கான முயற்சிகளையும் நாம் ஊக்கப்படுத்தி வருகிறோம்.
உலகத்தின் தற்போதைய நிலைகளுக்கு இந்தியாவின் தீர்வுகள் என்பது நமது இலக்காகவும், குறிக்கோளாகவும் இருக்கிறது.
ஏழ்மையான நாடுகளுக்குத் தேவைப்படும் சேவைகள் கிடைக்க குறைந்த செலவிலான தீர்வுகளையே நாம் விரும்புகிறோம். உலகின் எந்த பகுதியில் வாழ்பவர்களாக இருந்தாலும் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும்.
புவி வெப்பமாதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு இந்தியாவில் இருந்து வர வேண்டும். இந்தியா, சிங்கப்பூர் கடந்து ஆசிய நாடுகளிலும் இந்த போட்டிகள் நடைபெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷங்க் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா முடிந்ததும் மேடையில் இருந்து இறங்கி வந்த நரேந்திரமோடி, ஹேக்கத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இதன்பின்பு, ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் அவர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து, விழா நடந்த அரங்கின் அருகே மற்றொரு அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய தொழில்நுட்ப கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
Related Tags :
Next Story