மாமல்லபுரம் நாளை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி


மாமல்லபுரம் நாளை செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 1 Oct 2019 12:11 PM GMT (Updated: 1 Oct 2019 12:11 PM GMT)

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் பழனிசாமி மாமல்லபுரம் நாளை செல்கிறார்.

சென்னை,

பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பு அக்டோபர் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறும்  என்றும் தெரிகிறது. நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. 

மகாபலிபுரத்தின் புராதன சின்னங்களையும் கண்டுகளிக்கவுள்ளனர். இரு நாட்டு தலைவர்களின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன மையங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார் சாலைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், முதலமைச்சர்  பழனிசாமி, மாமல்லபுரம் நாளை செல்கிறார். அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் அவர், பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்கிறார்.

அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, சீன அதிகாரிகள் குழு, மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் மாமல்லபுரத்தில் பலமுறை ஆய்வு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story