குளம் காணாமல் போனதாக வழக்கு: அனைத்து ஆவணங்களுடன் அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு


குளம் காணாமல் போனதாக வழக்கு: அனைத்து ஆவணங்களுடன் அதிகாரிகள் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Oct 2019 3:08 AM IST (Updated: 2 Oct 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

குளத்தை காணவில்லை என்ற வழக்கு விசாரணைக்கு அனைத்து ஆவணங்களுடன் விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருப்பவர் எம்.ஞானசேகரன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா வெள்ளிமேடுபேட்டை கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாக கோமுட்டி குளம் இருந்தது. இது என்னுடைய சொந்த கிராமம் ஆகும். இந்த குளத்தை, கட்டிட கழிவுகளை போட்டு, முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் ராஜதுரை நிரப்பி, குளத்தை காணாமல் ஆக்கிவிட்டார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர், திண்டிவனம் தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்தநிலையில், குளம் இருந்த இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதாக கிராம பதிவேட்டில் தாசில்தார் திருத்தம் செய்துள்ளார். இதன்மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்த குளம் காணாமல் போய்விட்டது. எனவே, குளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றும் குளத்தை மூடிய முன்னாள் பஞ்சாயத்து தலைவர், தாசில்தார் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்து, குளம் தொடர்பான வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், ‘ஏ’ ரிஜிஸ்டரில் சம்பந்தப்பட்ட சர்வே எண்ணில், மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு குளம் இல்லை. ஆரம்ப சுகாதார மையம் உள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், கிராம வரைபடத்தில் (எப்.எம்.) அங்கு கோமுட்டி குளம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மாறுபட்ட தகவல்களுடன் பதில் மனுக்களை அதிகாரிகள் தாக்கல் செய்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர் ‘ஏ’ ரிஜிஸ்டரில் திருத்தம் செய்யப்பட்டதா? இல்லை வரைபடத்தில் திருத்தம் செய்யப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது நீதிபதி எம்.சத்தியநாராயணன், ‘கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா?’ என்று கேள்வி கேட்டார்.

நீதிபதி என்.சேஷசாயி, ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’ என்று பாட்டை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு தரப்பில் சரியான பதில் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, ‘கோமுட்டி குளம் இருந்ததா?, இல்லையா? என்பதற்கு அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருகிற 24-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story