கோர்ட்டு வளாகத்தில் சமூக ஆர்வலர் முகிலன் திடீர் தர்ணா போராட்டம் போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு
கரூர் கோர்ட்டு வளாகத்தில் சமூக ஆர்வலர் முகிலன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலரான முகிலன் (வயது 53). இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். முகிலன் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கரூர் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அவரை கரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது வேனிலிருந்து இறங்கிய முகிலன் கோர்ட்டு வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, போலீசார் தன்னை அலைக் கழிப்பதாக குற்றம் சாட்டினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்புக்கு வந்த போலீசார், உடனடியாக முகிலனை குண்டு கட்டாக தூக்கிக்கொண்டு கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி கோபிநாத் முன்பு முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கினை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, முகிலனை போலீசார் வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக முகிலன் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறைவாசிகளாக இருக்கிற 300-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து தண்டனை அனுபவித்து வருகிறார்கள். வழக்கு வித்தியாசம் பார்க்காமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி திருச்சி மத்திய சிறையில் நாளை (அதாவது இன்று) முதல் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருக்கிறேன். என்றார்.
Related Tags :
Next Story