பிரதமர் மோடி நிகழ்ச்சியை நேரலை செய்யாத சென்னை தூர்தர்ஷன் அதிகாரி சஸ்பெண்ட்
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவி இயக்குநர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்திய ஹேக்கத்தான் தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கி பேசினார்.
பிரதமர் மோடியின் பேச்சை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் நேரலை செய்யவில்லை என புகார் எழுந்தது.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒளிபரப்பு பிரிவின் உதவி இயக்குனர் வசுமதியிடம் பிரசார் பாரதி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது மோடியின் நிகழ்ச்சிகளை 18 கேமிராக்கள் மூலம் ரெக்கார்டு செய்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்தது தெரிய வந்தது. ஆனால் நேரலை செய்யாதது குறித்து விசாரணை நடத்தியதில் உரிய பதிலை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் உதவி இயக்குனர் வசுமதியை சஸ்பெண்டு செய்து பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி சசி ஷேகர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த பணியிடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வசுமதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தங்கி இருக்கும்படியும், வெளியே செல்ல அவசியம் ஏற்பட்டால் முறையான அனுமதி பெற்று செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story