உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள்; 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு; ஐகோர்ட்டில், தமிழக அரசு அறிக்கை தாக்கல்


உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகள்; 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு; ஐகோர்ட்டில், தமிழக அரசு அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 3 Oct 2019 3:00 AM IST (Updated: 3 Oct 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் சுமார் ரூ.3 லட்சத்து 431 கோடி மதிப்பில் முதலீடுகள் கிடைக்கும் என்றும் சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

உலக முதலீட்டாளர் மாநாடு கடந்த ஜனவரி 23-ந்தேதி மற்றும் 24-ந்தேதி சென்னையில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்கள் குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியதால், தமிழகத்துக்கு எவ்வளவு முதலீடு கிடைத்துள்ளது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்? என்பது உள்பட பல கேள்விகளை கேட்டு, அதற்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவின்படி விவரங்கள் கொண்ட அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி எஸ்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் கிடைக்க உள்ள வேலை வாய்ப்பு, முதலீடுகள் குறித்த அறிக்கையை ஐகோர்ட்டு பதிவுத்துறையில் அண்மையில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையை தொழில்துறை முதன்மை செயலாளர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்பட பல நாடுகளில் இருந்து ஏராளமான முதலீட்டாளர்கள் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். அப்போது வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வது தொடர்பாக ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன.

அதாவது, தொழில்துறையில் 147 வெளிநாட்டு நிறுவனங்களுடனும், தகவல் தொழில்நுட்பத்துறையில் 11, எரிசக்தி துறையில் 16, வீட்டு வசதித்துறையில் 66, சுற்றுலா துறையில் 8, விவசாயத்துறையில் 2, உயர்கல்வித்துறையில் 51, பள்ளிக்கல்வித்துறையில் 3 நிறுவனங்கள் என மொத்தம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

இதன் மூலம் தமிழகத்துக்கு ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

2015-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதி சென்னையில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் 10 ஆயிரத்து 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதுதவிர, வேறு சில ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story