ஆந்திராவில் 20 சதவீதம் மூடப்பட்டதை போல் தமிழகத்திலும் மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


ஆந்திராவில் 20 சதவீதம் மூடப்பட்டதை போல் தமிழகத்திலும் மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Oct 2019 4:30 AM IST (Updated: 3 Oct 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் 20 சதவீத மதுக்கடைகள் மூடப்பட்டதை போல், தமிழகத்திலும் மதுக் கடைகளை மூடும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆந்திராவில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அம்மாநிலத்தில் 880 மதுக்கடைகள், அதாவது 20 சதவீத மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி மது விற்பனை நேரமும் 2 மணி நேரம் குறைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.

பா.ம.க. மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையும், மது விற்பனையும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் தமிழகத்தில் 6,720 ஆக இருந்த மதுக்கடைகள் இப்போது 5,198 ஆக குறைக்கப்பட்டுள்ளன. மது விற்பனை நேரமும் 12 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்காக அ.தி.மு.க. அரசிடம் பா.ம.க. முன்வைத்த 10 கோரிக்கைகளில், படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும். அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள தமிழக அரசு, மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆந்திராவில் அதிவேகத்தில் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு ஆகும். எனவே, படிப்படியாக மது விலக்கை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக குறைந்தது 500 மதுக்கடைகளை மூடவும், விற்பனை நேரத்தை நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை என்ற அளவில் குறைக்கவும் அரசு முன்வர வேண்டும்.

அத்துடன் மதுக்கடைகளுடன் இணைந்த பார்களை ஒட்டுமொத்தமாக மூட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, ஒரு சொட்டு மதுகூட இல்லாத, மகிழ்ச்சியான தமிழகத்தை உருவாக்குவதற் கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story