வறுமை வாட்டியதால் 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை முயற்சி


வறுமை வாட்டியதால் 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 4 Oct 2019 4:15 AM IST (Updated: 4 Oct 2019 3:21 AM IST)
t-max-icont-min-icon

வறுமை வாட்டியதால் 2 மகள்களை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்றார்.

போடி,

தேனி மாவட்டம் போடி காந்தி நகரை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 42). இவரது மனைவி லட்சுமி(36). இவர்கள் சென்னை வளசரவாக்கத்தில் அரிசி கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்களுடைய மகள்கள் அனுசுயா(16), ஐஸ்வர்யா(14), அட்சயா(10).

இந்நிலையில் பால்பாண்டி சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் லட்சுமி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அரிசி கடையை காலி செய்து விட்டு மீண்டும் தனது 3 மகள்களுடன் போடி காந்தி நகருக்கு வந்தார். அங்கு அவர் தையல் தொழில் செய்து தனது மகள்களை காப்பாற்றி வந்தார்.

போடியில் உள்ள பள்ளியில் மூத்த மகள் அனுசுயா பிளஸ்-1-ம், 2-வது மகள் ஐஸ்வர்யா 9-ம் வகுப்பும், 3-வது மகள் அட்சயா 5-ம் வகுப்பும் படித்து வந்தனர். 3 குழந்தைகளை தவிக்க விட்டு கணவர் இறந்த சோகம் லட்சுமியை விட்டு மறையவில்லை. எனினும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று வாழ்க்கையுடன் போராடினார். எனினும் வறுமை அவரை வாட்டியது. அவருக்கு உறவினர்கள் அவ்வப்போது ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் போடியில் வசிக்கும் லட்சுமியின் அண்ணன் முருகனும், அக்காள் பேச்சியம்மாளும் நேற்று முன்தினம் இரவு செல்போனில் பேசினார்கள். தைரியமாக இரு, நாங்கள் பார்த்து கொள்கிறோம் என அவர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் லட்சுமியின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் அண்ணன் முருகன், அக்காள் பேச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து, லட்சுமியின் வீட்டு கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. பின்னர் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது லட்சுமி மற்றும் அவரது மகள்கள் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் போகும் வழியிலேயே மூத்த மகள் அனுசுயா, 2-வது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தாய் லட்சுமியும், கடைசி மகள் அட்சயாவும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் லட்சுமி காபியில் விஷம் கலந்து 3 மகள்களுக்கும் கொடுத்து விட்டு தானும் குடித்து உள்ளது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story