உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் அஜினமோட்டா தமிழகத்தில் தடை செய்யப்படுமா? சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் பதில்


உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும்  அஜினமோட்டா தமிழகத்தில் தடை செய்யப்படுமா? சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் பதில்
x
தினத்தந்தி 4 Oct 2019 5:15 AM IST (Updated: 4 Oct 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

உணவில் சுவையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுவரும் அஜினமோட்டா தமிழகத்தில் தடை செய்யப்படுமா? என்பதற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பதில் அளித்தார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி மையம் மற்றும் சிவில் என்ஜினீயரிங் துறை சார்பில் ‘காற்று மாசு மற்றும் பருவநிலை மாற்றம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா, சுற்றுச்சூழல் கல்வி மைய இயக்குனர் எஸ்.கண்மணி, மாசு கட்டுப்பாடு வாரிய கூடுதல் தலைமை செயற்பொறியாளர் அ.செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் காற்றில் மாசின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவை விட குறைவாகவே உள்ளது. எங்கேனும் அதிகமாக மாசு வெளிப்பாடு தெரிந்தால் அங்கே மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் உடனடியாக சென்று ஆய்வு செய்து அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது புதிய தொழில் நுட்பத்தினை பயன் படுத்தி அனல்மின் நிலையங்கள், சிமெண்ட், சர்க்கரை ஆலைகள் மற்றும் அரிசி மில் போன்ற பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் புகையில் உள்ள நுண்துகள்கள் தண்ணீர் மூலம் வடிகட்டப்பட்டு பின்பு புகை மட்டும் தனியே வெளியேற்றப்பட்டு மாசின் அளவு பெருமளவில் குறைக்கப்படுகிறது.

மனிதனுக்கு காற்று எவ்வளவு அவசியமோ அந்த காற்றினை சுத்திகரிக்க தாவரங்கள் மிகவும் அவசியமாகும். ஆனால் நாம், நம் உயிர்காக்கும் இயற்கையை அழித்து வருகிறோம். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் லட்சக்கணக்கான மரங்களை நட உத்தரவிட்டார். அதன்படி, தற்போது வரை 4 கோடியே 50 லட்சம் மரங்கள் தமிழகம் முழுவதும் நடப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு மாணவ-மாணவியும் தங்களால் இயன்ற அளவில் குறைந்தபட்சம் 4 மரங்களாவது நடவேண்டும். அதேபோல், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மரம் நடுவதால் வரும் பயன்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களையும் மரம் நட விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். நீங்கள் நடும் ஒவ்வொரு மரமும் வருங்காலங்களில் உங்கள் பேரைச்சொல்லும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த அமைச்சர் கே.சி.கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி என்பது அனைவரும் சந்தோஷமாக கொண்டாடக்கூடிய ஒரு நாள். அதில் பொதுமக்கள் பாதிக்கப்படாதவகையில் அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது ஜெயலலிதா அரசின் கடமை ஆகும். பழைய டயர் எரிப்பது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளி நேரத்தில் எந்தெந்த பட்டாசுகள் வெடிக்கலாம்? வெடிக்கக்கூடாது? என்பது குறித்து தரம் பிரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு எந்த நேரத்தில் வெடி வெடிக்க அனுமதிக்கிறதோ? அதை கடைப்பிடிக்க வேண்டும். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

உணவின் சுவையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் அஜினமோட்டாவை தடை செய்வது குறித்து இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை. ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை மேலும் குறைப்பதற்கும், பிளாஸ்டிக் தடையை வலுப்படுத்துவதற்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story