2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு - நாங்குநேரியில் 23 பேர் போட்டி, விக்கிரவாண்டியில் 12 பேர் மோதுகிறார்கள்


2 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு - நாங்குநேரியில் 23 பேர் போட்டி, விக்கிரவாண்டியில் 12 பேர் மோதுகிறார்கள்
x
தினத்தந்தி 4 Oct 2019 5:45 AM IST (Updated: 4 Oct 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, நாங்குநேரி தொகுதியில் 23 பேரும், விக்கிரவாண்டியில் 12 பேரும் போட்டியிடுகிறார்கள்.

நெல்லை,

தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 30-ந் தேதியுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது. 1-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசிநாள் ஆகும். மனுக்கள் வாபஸ் பெறும் நேரம் முடிவடைந்ததும் நேற்று மாலை இரு தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 37 பேர் 46 வேட்பு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். வேட்புமனு பரிசீலனையின் போது 22 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 24 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளரான முருகன் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, நாங்குநேரி தொகுதியில் இறுதியாக 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. ரெட்டியார்பட்டி நாராயணன் (அ.தி.மு.க.)

2. ரூபி மனோகரன் (காங்கிரஸ்)

3. ராஜநாராயணன் (நாம் தமிழர் கட்சி)

4. காட்பிரே வாஷிங்டன் நோபுள் (தேசிய மக்கள் சக்தி கட்சி)

இவர்கள் தவிர பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் உள்பட 19 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஹரி நாடாருக்கு தலைக்கவசம் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் பரிசீலனையின் போது 8 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் நேற்று தங்கள் மனுக் களை திரும்ப பெற்றனர்.

இதனால் இந்த தொகுதியில் இறுதியாக 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.)

2. புகழேந்தி (தி.மு.க.)

3. கந்தசாமி (நாம் தமிழர் கட்சி)

இவர்கள் தவிர, தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனர் இயக்குனர் கவுதமன் உள்பட மற்ற 9 பேரும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவார்கள். இயக்குனர் கவுதமனுக்கு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இடைத்தேர்தல் நடை பெறும் இரு தொகுதிகளில் நாங்குநேரி காங்கிரஸ் வசம் இருந்த தொகுதி ஆகும். விக்கிரவாண்டி தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதி.

இதில் நாங்குநேரியில் ஆளும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கும், தி.மு.க. வேட்பாளர் புகழேந்திக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இரு தொகுதிகளிலும் நேரடி போட்டி இருந்த போதிலும், இந்த தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு விட்டதால், இரு தொகுதிகளிலும் இனி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும்.

வருகிற 21-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். பதிவான வாக்குகள் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Next Story