முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு
முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
3 முறை தலாக் கூறி உடனடி விவகாரத்து செய்யும் நடைமுறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.
முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டு சிறை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த புதிய சட்டத்தின் கீழ் தற்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா.
இவரது மனைவி ரிஸ்வானா பேகம் (25). இவர்களுக்கு கடந்த 2017-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு இடையே குடும்பத் தகராறு அவ்வபோது ஏற்பட்டுள்ளது.
இதனால், ரிஸ்வானாவுடன் சேர்ந்து வாழ முடியாதென ஷேக்அப்துல்லா மூன்று முறை தலாக் கூறியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஷேக்அப்துல்லா, அவரது தந்தை முகமது மீரான், தாய் மகபூப் பீவி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் மீது முத்தலாக் தடைச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story