தினகரனையும்-சசிகலாவையும் விமர்சிக்கும் நமது அம்மா கவிதை


தினகரனையும்-சசிகலாவையும் விமர்சிக்கும் நமது அம்மா கவிதை
x
தினத்தந்தி 4 Oct 2019 1:04 PM GMT (Updated: 4 Oct 2019 1:04 PM GMT)

ஆமைகள் புகுந்திட அதிமுக ஊமைகள் கூடம் ஆகுமாம்.. என நமது அம்மா கவிதை வெளியிட்டு உள்ளது.

சென்னை: 

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா நன்னடத்தை விதிகளின்படி முன்கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பு இருக்கிறது என பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், அவர் வெளியே வந்ததும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு செல்வாரா? அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பாரா?  என்ற கேள்வி அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

சசிகலா வெளியே வந்ததும் எடப்பாடியும் சசிகலாவும் கைகோர்ப்பார்கள். அதன் பிறகு பொதுக்குழு கூடும் என்று ஒரு தரப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு அளிப்பார் என்று  மற்றொரு ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இதற்கு விடை சொல்லும் விதமாக சசிகலாவின் அண்மைக்கால சில செயல்பாடுகள் அமைந்திருப்பதாக அமமுக நிர்வாகிகள் சில ஆதாரங்களை முன் வைத்து பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

நிச்சயமாக சின்னம்மா தற்போதைய அ.தி.முக. பக்கம் சாய மாட்டார். அதிமுக விவகாரத்தில் பொதுச்செயலாளர் பதவியை மீட்க சட்டப் போராட்டம் நடத்தினாலும் அமமுகவின் வளர்ச்சியில் அதீத ஆர்வம் காட்டுகிறார்.  குறிப்பாக கட்சியை வளர்க்க அவர் சிறையில் இருந்தவாறு பல செய்திகளை எங்களுக்கு அனுப்பி வருகிறார் என கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று  சத்தியத்து கோட்டையும் சாத்தான்கள் நோட்டமும் என்ற தலைப்பில் நமது அம்மா கவிதை வெளியிட்டு உள்ளது. அந்த கவிதை  தினகரனையும் சசிகலாவையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

உள்ளே இருப்பவர் வெளியே வருவாராம்
ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கத்தை உடனேயே தனதாக்கி கொள்வாராம் 
ஆமைகள் புகுந்திட அதிமுக ஊமைகள் கூடம் ஆகுமாம்
மக்கள் திலகமும் மகராசி அம்மாவும் 
வளர்த்த கழகம் மாஃபியா உலகம் ஆகுமாம்
கூடவே.. தன் தவறு உணர்ந்து தாய்வீடு திரும்புவோரை
தடுத்து நிறுத்த பெய்டு நியூஸ் பரப்பி விட்டு பித்தலாட்டம் செய்கிறது 
அட கூறுகெட்ட குக்கர்களே அப்பழுக்கில்லா அம்மாவின் அரசியல் புனிதத்தில்
விஷமாகி கலந்து அதிமுக எனும் மாசற்ற இயக்கத்தை கைவைத்தும்
மண்ணுளி பாம்புகளாய் மறைந்திருந்து கொண்டு
கழகத்தை கரையானாய் அரித்து கறை படிய வைத்ததும்
தாய் தந்த பதவியை எல்லாம் தாங்கள் தந்தது என
பின்னிருந்து கொண்டு பில் போட்டு பிழைத்ததும் 
முடிசூடிய உடனேயே முதலிட்ட கையெழுத்து மது ஒழிப்பு என்றிருக்க 
அந்த மகராசி இல்லத்தில் இருந்து கொண்டே 
கோல்டன் மிடாஸ் எனும் குடிகெடுக்கும் சாராய ஆலையை நடத்தி
கும்மாளம் போட்டதும் பொன்மனத்து தலைவன்
புகழ் மணக்கத் தொடங்கி  இல்லாரை காத்திடவே
இமையாக போற்றிய ஏழைகளின் சொர்க்கமாம்
ஈரிலை கழகத்திற்கு இழுக்கும் அழுக்கும் சேர்த்திட்ட
நச்சுக்கிருமிகள் இனி ஒரு நாளும்
கோடி தொண்டர்கள் வணங்குகிற ஆலையத்தில் குடிபுகவும் முடியாது 
சுத்திகரித்த கங்கையாக சூதகமில்லா மங்கையாக தொண்டர்கள் கூடி நடத்துகிற தூய நதி சொரூபமாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைகரத்தால்
இரண்டாயிரத்து இருபத்து ஒன்று நோக்கி 
பீடு நடை போடுகிற சத்தியத்தின் கோட்டைக்குள்
அந்த சாத்தான்கள் ஒருநாளும் சரசமாட முடியாது சத்தியம் இது சத்தியம் 

என கவிதை வெளியிட்டு உள்ளது.

Next Story