ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி நிறைவு
ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி நிறைவு பெற்றது.
சென்னை,
2016-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடந்தபோது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை, திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை 49 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி ராதாபுரம் சட்டமன்றத்தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. ராதாபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள ஒரு அறையில் வைத்து மீண்டும் எண்ணப்பட்டது.
இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அதேசமயம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வரும் அக்டோபர் 23-ஆம் தேதி வரை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தற்போது ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி நிறைவு பெற்றது. பதிவான தபால் வாக்குகள் மற்றும் கடைசி 3 சுற்றுகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன. மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான அறிக்கை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் அளிக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story